ராமநாதபுரம் மாவட்டம் தினைக்குளம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியைச் சீரமைக்கக் கோரிய வழக்கில் நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ராமநாதபுரம் தினைக்குளத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக் கட்டிடம் சேதமடைந்து இருப்பதாகவும், வகுப்பறைகளில் மாணவிகள் அமர்ந்து பயில்வது ஆபத்தானது என ஊடகங்களில் செய்தி வெளியானது.
இந்தச் செய்தியை அடிப்படையாகக் கொண்ட பொதுநல வழக்கு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
இப்பள்ளியை நேரில் சென்று ஆய்வு செய்ய நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ஆணையர் தாக்கல் செய்த அறிக்கையில், பள்ளிக் கட்டிடம் பாதுகாப்பானதாக இல்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அரசுத் தரப்பில், பள்ளியின் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டிருந்தன.
அந்த விரிசல்கள் சரி செய்யப்பட்டுள்ளன. நிபுணர் குழு ஆய்வு செய்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், வழக்கறிஞர் மீண்டும் பள்ளியை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அரசுத் தரப்பில் அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவின் அறிக்கை மற்றும் புகைப்படத்துடன் அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை அக்.21-க்கு ஒத்திவைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago