கரோனா 3-வது அலை தடுப்பு முன்னெச்சரிக்கையாக மகாளய அமாவாசை தினமான நேற்று பொதுமக்களுக்கு தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டதால் ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரை வெறிச்சோடிக் காணப்பட்டது.
சூரியனும், சந்திரனும் சேரும் அமாவாசையன்று முன்னோர்களுக்கு பசியும், தாகமும் அதிகம் ஏற்படும். முன்னோர்களுக்கு அமாவாசை தினத்தன்று தர்ப்பணம் செய்வதன் மூலம் அவர்களுக்கு உணவும், நீரும் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த ஐதீகத்தைப் பூர்த்திசெய்ய இந்துக்கள் தை, மாசி, ஆடி, மற்றும் மகாளய அமாவாசைகளில் நீர்நிலைகளில் அதை நிறைவேற்றுவார்கள்.
ராமேசுவரத்தில் மகாளய அமாவாசை தினத்தன்று தர்ப்பணம் செய்வதன் மூலம் முன்னோர்களின் நல்லாசியுடன் சிறந்த வாழ்க்கைத் துணையும், கல்விக் கேள்விகளில் சிறந்த குழந்தைகள், வீடு, விளைநிலம், பசுக்கள், தொழில் அபிவிருத்தி, ஆரோக்கியம், தீர்க்காயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனால் முன்னோர் களுக்கு தர்ப்பணம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மகாளய அமாவாசை அன்று ராமேசுவரத்தில் கூடுவது வழக்கம்.
கரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக மகாளய அமாவாசையை முன் னிட்டு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்யவும், அக்னி தீர்த்தக் கடற்கரையில் தர்ப்பணம் கொடுக்கவும், புனித நீராடவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் மகாளய அமாவாசை அன்று பல்லாயிரக் கணக்கான பக்தர்களால் நிரம்பி வழியும் ராமேசுவரம் நேற்று வெறிச்சோடிக் காணப்பட்டது.
மேலும் இதேபோல திருப்புல்லாணி சேதுக்கரை கடற்கரை, தேவிபட்டினம் நவபாசனக் கடற்கரை, மாரியூர் கடற்கரை ஆகிய இடங்களிலும் முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் செய்யவும், புனித நீராடவும் காவல்துறையினர் அனுமதிக்கவில்லை.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago