ஈரோடு மாநகராட்சியில் வாட்ஸ் அப் மூலம் புகார் தெரிவிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்ட இரு மாதத்திலேயே சேவை முடங்கியுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்களின் குறைகளை பூர்த்தி செய்யும் பணிக்காக 94890 92000 என்ற வாட்ஸ்அப் எண், ஜூலை மாதம் 20-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதில், சாக்கடை, தெருவிளக்கு, கழிவுநீர் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்றும், புகார்களை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் தெரிவித்தார்.
இதையடுத்து மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும்பொதுமக்கள் படத்துடன் தங்களது பகுதி பிரச்சினைகளை வாட்ஸ் அப்பில் பதிவிட்டனர். தொடக்கத்தில், புகார்களைப் பெற்றுக் கொண்டதற்கான பதில் தகவல் அனுப்பப்பட்டதோடு, உடனுக்குடன் தீர்க்க முடிந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வந்தன. நாள்தோறும் 40 முதல்50 புகார்கள் வரை வருவதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்தது.
ஆனால், கடந்த 10 நாட்களுக்கு மேலாக வாட்ஸ் அப் புகார்கள் மீது மாநகராட்சி நிர்வாகம் எவ்விதநடவடிக்கையும் எடுப்பதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து ஈரோடு சம்பத்நகர் பகுதியைச் சேர்ந்த சங்கர் கூறியதாவது:
வாட்ஸ் அப் மூலம் புகார் தெரிவிக்கும் வசதி அறிவிக்கப்பட்டதும், சம்பத் நகர் வீட்டுவசதி வாரிய அலுவலகம் முன்பு உள்ள தெருவிளக்கு எரியவில்லை என புகார் அளித்தேன். அடுத்தநாளே அதனைச் சரிசெய்தனர். தற்போது அந்த விளக்கு மீண்டும் பழுதானது குறித்தும், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மரக்கிளை உடைந்து தொங்குவது குறித்தும், பாதாளசாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவு நீர்வெளியேறுவது குறித்தும் புகைப்படத்துடன் புகார் செய்தேன். ஆனால், புகாரைப் பதிவு செய்வதும் இல்லை. அதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதேபோல், நகரின் பல்வேறு பகுதிகளில் புகார் அளித்தவர்களும் தங்கள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை என்று சொல்கிறார்கள். அதே நேரத்தில் அமைச்சர் பங்கேற்கும் விழா நடக்கும் இடங்களில் மட்டும் மாநகராட்சி நிர்வாகத்தினர் தூய்மைப்பணி உள்ளிட்டவற்றில் அக்கறை காட்டுகின்றனர் என்றார்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் தூய்மைப்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும், மாதம்தோறும் 10-ம் தேதி உதவி ஆணையர் தலைமையில் குறைதீர்க்கும் கூட்டங்கள் நடக்கவுள்ளது என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago