100 நாள் வேலையைக் கண்காணிக்க தனிக் குழு அமைக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், வேளாண் இணை இயக்குநர் சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும், புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகளின் போராட்டக்களத்தில் வாகன விபத்தை ஏற்படுத்தி படுகொலை செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் முழக்கமிட்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:
தம்புசாமி: அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கடந்த ஆட்சியைப் போலவே, தற்போதும் நெல் சிப்பத்துக்கு ரூ.40 வாங்குகின்றனர். நெல் ஈரப்பத பிரச்சினையை சமாளிக்க வட்டத்துக்கு ஒரு நெல் உலர்த்தும் இயந்திரம் அமைத்துத் தர வேண்டும்.
சண்முகசுந்தரம்: தமிழக முதல்வர் உத்தரவிட்டும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு கடனுதவி கிடைக்கவில்லை.
கஜா புயலின்போது பலர் உடமைகளை இழந்த நிலையில், 2016-ல் பிரீமியம் செலுத்திய ரசீது இருந்தால் மட்டுமே பயிர்க் காப்பீட்டுக்கான இழப்பீட்டுத் தொகை தருவோம் என அதிகாரிகள் தெரிவிப்பதை அரசு கண்டிக்க வேண்டும்.
பத்மநாபன்: விவசாயிகள் மீது 2019-ம் ஆண்டில் போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார். ஆனால், 2019-ல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு போலீஸார் சம்மன் வழங்கி வருகின்றனர்.
மருதப்பன்: நடமாடும் நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். நீடாமங்கலம் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்.
பயரி கிருஷ்ணமணி: ஆந்திராவிலிருந்து சிலர் மீன்களை வாங்கி வந்து, ரசாயனம் கலந்து கிலோ ரூ.95-க்கு விற்பனை செய்கின்றனர். இதனால், உள்நாட்டு மீன்களின் விற்பனை குறைந்து, மீன் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விவசாய நலச் சங்கத் தலைவர் சேதுராமன்: 100 நாள் வேலையை கண்காணிக்க தனிக்குழு அமைக்க வேண்டும். அரசு திட்ட ஒதுக்கீட்டின்படி விவசாயிகளுக்கு உரம் வழங்க வேண்டும். அல்லது உரத்துக்கான பணத்தை வழங்க வேண்டும்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் மாசிலாமணி: டிஏபி உரத்துக்கு மாற்று உரம் தயாரிக்க அரசு பரிந்துரைக்க வேண்டும். அலிவலம் வாளவாய்க்கால் பகுதிகளில் மணல் திருட்டை தடுக்க வேண்டும். தப்பளாம்புலியூர் கூட்டுறவு சங்கத்தில் 2018, 19-ம் ஆண்டில் மோசடி நடைபெற்றுள்ளது. தற்போது நகைக்கடன் மோசடியும் நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக, ஆட்சியர் விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் பேசினர்.
தொடர்ந்து, விவசாயிகளின் சில கோரிக்கைகளுக்கு விளக்கம் அளித்த ஆட்சியர், மற்ற கோரிக்கைகள் குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகத் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago