மருந்தகத்தில் அரிவாளை காட்டி மிரட்டி - தூக்க மாத்திரைகளைஅள்ளிச் சென்ற 2 பேர் கைது :

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை சின்னையா தெரு மைனர் பங்களா எதிரில், தனியார் மருத்துவமனை மற்றும் அதனுடன் இணைந்த மருந்தகம் உள்ளது.

இங்கு கடந்த 4-ம் தேதி இரவு வந்த 2 இளைஞர்கள் மருந்துச் சீட்டு இல்லாமல் தூக்க மாத்திரையை கேட்டுள்ளனர். மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் தூக்க மாத்திரை தர முடியாது என்று கடையில் இருந்த பெண் கூறியுள்ளார்.

இதையடுத்து, இளைஞர்களில் ஒருவர் தனது சட்டைக்குள் மறைத்து வைத்திருந்த அரிவாளைக் காட்டி அந்தப் பெண்ணை மிரட்டி, மருந்தகத்தில் இருந்த தூக்க மாத்திரைகளை அள்ளிச் சென்றார்.

இதுகுறித்த புகாரின் பேரில், பட்டுக்கோட்டை டிஎஸ்பி செங்கமலக்கண்ணன் மற்றும் காவல் துறையினர் மருந்தகத்துக்கு வந்து, அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக தேடிப்பிடிக்க எஸ்.பி ரவளி ப்ரியா உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, சிசிடிவி காட்சியில் தெரிந்த உருவத்தை அடையாளம் வைத்து, காவல் துறையினர் தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் அவர்கள் பட்டுக்கோட்டை மகாராஜா சமுத்திரம் காட்டாற்றுப் பகுதியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.

உடனடியாக பட்டுக்கோட்டை காவல் ஆய்வாளர் ராஜேஷ், உதவி ஆய்வாளர்கள் முத்துக்குமார், பாஸ்கர் உள்ளிட்ட காவல் துறையினர் அங்கு சென்றனர்.

அப்போது, காவல் துறையினரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்று காட்டாற்று பாலத்தில் இருந்து குதித்ததில், பண்ணவயல் கிராமத்தைச் சேர்ந்த ஹரிஹரன்(20) வலது கை முறிந்தது. பட்டுக்கோட்டை தச்சுத் தெருவைச் சேர்ந்த ராஜேஷ்(19) வலது கால் உடைந்தது.

இதையடுத்து இருவரையும் மடக்கிப் பிடித்த போலீஸார், அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த அரிவாளையும் பறிமுதல் செய்தனர். பின்னர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், பட்டுக்கோட்டை வந்த தஞ்சாவூர் எஸ்.பி ரவளி ப்ரியா, வழக்கில் தொடர்புடையவர்களை விரைந்து பிடித்த காவல்துறையினரை பாராட்டினார். முன்னதாக, போலீஸார் நடத்திய விசாரணையில், தூக்க மாத்திரையை போதைக்கு பயன்படுத்தி வந்ததாக கைது செய்யப்பட்ட இளைஞர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்