திருச்சியில் 25 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் துணை வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என துணைவேந்தர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் அருகே நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் 6-வது பட்டமளிப்பு விழா காணொலிக் காட்சி வாயிலாக நேற்று நடைபெற்றது. பல்கலைக்கழக வேந்தர் பத்மநாபன் தலைமை வகித்தார். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய பாதுகாப்புத் துறை ஆலோசகர் சதீஷ் ரெட்டி ஆகியோர் காணொலி வாயிலாக சிறப்புரையாற்றினர்.
அப்போது, நீலக்குடியில் உள்ள பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைவேந்தர் கிருஷ்ணன், செய்தி தொடர்பாளர் வேல்முருகன் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் துணைவேந்தர் கிருஷ்ணன் கூறியதாவது: தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் இளநிலை 3-ம் ஆண்டு மற்றும் முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் அக்.20-ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் மீண்டும் தொடங்க உள்ளன. மாணவ - மாணவிகள் இரு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ்களை சமர்ப்பித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
திருச்சியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் துணை வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தபோது, இத்துணை வளாகம் அமைக்க திருச்சியில் 25 ஏக்கர் இடம் ஒதுக்குவதாகவும், பல்கலைக்கழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாகவும் உறுதியளித்துள்ளார். மத்திய பல்கலைக்கழகத்துக்குத் தேவையான நிதியை மத்திய அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது. தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் விரைவில் விளையாட்டுக்கு என தனித் துறை கொண்டுவரப்பட உள்ளது என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago