மகாளய அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர், தூத்துக்குடியில் - கடற்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு :

By செய்திப்பிரிவு

மகாளய அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் உள்ளிட்ட கடற்கரைகளில் நேற்று பலரும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

எல்லா மாதங்களிலும் அமாவாசை வந்தாலும், தை அமாவாசை,ஆடி அமாவாசை, புரட்டாசி மாதம்வரக்கூடிய மகாளய அமாவாசைஆகியவை சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. இந்த நாட்களில் கடற்கரை, ஆற்றங்கரை உள்ளிட்ட நீர்நிலைகளில் தங்கள்முன்னோர்களுக்கு தர்ப்பனம் கொடுத்து வழிபடுவதை இந்துக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

நேற்று மகாளய அமாவாசையை முன்னிட்டு, தூத்துக்குடி துறைமுக கடற்கரை, தாமிரபரணி ஆற்றங்கரையோர பகுதிகளில் ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் நேற்று அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை,தொடர்ந்து மற்ற கால பூஜைகள்நடைபெற்றன. மகாளய அமாவாசையை முன்னிட்டு கோயில் கடற்கரையில் ஏராளமானோர் தங்கள்முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர், கோயிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

திருநெல்வேலி

திருநெல்வேலியில் மகாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தங்கள் வீடுகளிலேயே பலர் தர்ப்பணம் கொடுத்தனர். கரோனா தடுப்பு நடவடிக்கையாக மகாளய அமாவாசையை முன்னிட்டு வரும் 10-ம் தேதி வரைகாரையாறு, பாபநாசம் கோயில்களில் வழிபாடு செய்யவும், தாமிரபரணி படித்துறைகளில் தர்ப்பணம் கொடுக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு பதாகைகள் தாமிரபரணி படித்துறைகளில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று தர்ப்பணம் கொடுக்கவந்தவர்களை போலீஸார் திருப்பிஅனுப்பினர். கரோனா கட்டுப்பாடுகளால் பலர் தங்கள் வீடுகளிலேயே முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். திருநெல்வேலி குறுக்குத்துறையில் தாமிரபரணி படித்துறையில் சிலர் தடையை மீறி புனித நீராடி தாங்களாகவே தர்ப்பணம் கொடுத்தனர்.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். குற்றாலம் அருவிக்கரையில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்கள்அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். கரோனா பரவல் காரணமாக குற்றாலம் அருவியில் குளிக்கதடை நீடிப்பதால், இந்த ஆண்டு மகாளய அமாவாசை தினத்தில் குற்றாலம் வெறிச்சோடி காணப்பட்டது. தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ளவர்கள் ஆங்காங்கே ஆற்றங்கரைகளில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்