ஏரல் அருகே சிவகளையில் சோர நாதவிநாயகர் சொக்கநாதர் மீனாட்சிஅம்மன் கோயிலில் 2,000 பொம்மைகளுடன் பெரிய அளவில் கொலு அமைக்கப்பட்டுள்ளது.
நவராத்திரி விழா நாடு முழுவதும் இன்று தொடங்குகிறது. 9 நாட்கள் நடைபெறும் இவ்விழாவை முன்னிட்டு, வீடுகள் மற்றும் கோயில்களில், புரட்டாசி அமாவாசை நாளான நேற்றே கொலுபொம்மைகளை அலங்காரம் செய்து வைத்தனர்.
ஏரல் அருகே சிவகளை சோரநாத விநாயகர், சொக்கநாதர், மீனாட்சி அம்மன் கோயிலில் பெரியஅளவில் 9 படிகளில் கொலு அமைக்கப்பட்டுள்ளது. தசாவதாரம், கைலாய தரிசனம், குழந்தை சண்முகரை கார்த்திகைப் பெண்கள் வளர்த்தல், அஷ்டலெட்சுமி, அஷ்டகாளி உட்பட கடவுள் பொம்மைகள், பல்வேறு உயிரினங்கள், திருமண விழா, காவல்துறை, ராணுவம் உள்ளிட்ட சுமார் 2,000 பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன.
விஜயதசமியன்று இங்குள்ள சரஸ்வதி, லெட்சுமி, துர்க்கைசன்னதி முன்பு இளம் குழந்தைகளுக்கு எழுத்து பயிற்சி கற்றுக்கொடுக்கப்படும். ஏற்பாடுகளை கோயில் மகளிர் வழிபாட்டு குழுவினர் செய்துள்ளனர்.
கோவில்பட்டி
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் நேற்று அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. மற்ற காலபூஜைகள் வழக்கம் போல் நடந்தன. மாலையில் மூலவர் அம்பாளுக்கும், கொலு மண்டபத்தில் வீற்றிருக்கும் உற்சவர் அம்பாளுக்கும் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. வீரவாஞ்சிநகர் சங்கரலிங்கசுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் கோயிலிலும் கொலு அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.நவராத்திரி தொடக்கத்தை யொட்டி கடைகளில் விதவிதமான கொலு பொம்மைகள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன. பாரதப் போரில் கண்ணன்,அர்ஜூணனுக்கு சாரதியாக இருக்கும் பொம்மை அனைவரையும் கவர்ந்தது. மகாலட்சுமி, காளியம்மன், பெருமாள், ஆண்டாள், கருடாழ்வார், முருகன் பொம்மைகள் ரூ.20-ல் இருந்து ரூ.6 ஆயிரம் வரை விற்பனைக்கு வந்துள்ளன. கொலு பொம்மைகள் வாங்க மக்கள்ஆர்வம் காட்டினர். பெருமாள், ஆண்டாள் திருமண கோலத்தில் நிற்கும் பொம்மைகளை ஆர்வமுடன் வாங்கிச்சென்றனர்.
நாகர்கோவில்
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் 10 நாள் நவராத்திரி திருவிழா நேற்று தொடங்கியது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.அதைத்தொடர்ந்து காலை 9 மணிக்கு கோயில் கொலு மண்டபத்தில் பகவதியம்மன் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. மூலஸ்தானம் அருகே உள்ள மண்டபத்திலிருந்து உற்சவர் அம்பாள் மேளதாளத்துடன் ஊர்வலமாக கொலுமண்டபம் வந்தடை ந்தார். அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. அம்மன் எழுந்தருளிய கொலுமண்டபத்தில் நவராத்திரி கொலு அலங்கரித்து வைக்கப்பட்டது. கரோனா கட்டுப்பாடுகளால் பக்தர்கள் பங்களிப்பின்றி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தளவாய் சுந்தரம் எம்எல்ஏ,இந்து அறநிலையத்துறை மற்றும் கோயில் நிர்வாகிகள் பங்கேற்றனர். விழாவை முன்னிட்டு தினமும்இரவு 8 மணிக்கு பகவதியம்மனின் வாகன பவனி நடைபெறுகிறது. விழா நிறைவு நாளான வரும்15-ம் தேதி மாலை 6 மணிக்கு பகவதியம்மனின் பரிவேட்டை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago