திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக - முழு கொள்ளளவை எட்டிய 10 ஏரிகள் : ஆண்டியப்பனூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்வு

By ந. சரவணன்

திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் 10 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. ஆண்டியப்பனூர் அணை 98.86 மில்லியன் கன அடி நிரம்பி முழு கொள்ளளவை எட்டும் தருவாயில் இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இது மட்டுமின்றி மாவட்டத்தில் உள்ள முக்கிய ஏரிகள் வேகமாக நிரம்பி வரு கின்றன. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 10 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. ஆண்டியப்பனூர் அணையின் நீர்மட்டமும் 98.86 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது.

இது குறித்து திருப்பத்தூர் மாவட்ட பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் குமார், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறும்போது, ‘வெப்பச்சலனம் காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக அவ்வப்போது மழை பெய்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஜவ்வாதுமலையில் உள்ள நீர்பிடிப்புப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் ஆண்டியப் பனூர் அணைக்கு நீர்வரத்து அதி கரித்துள்ளது.

ஆண்டியப்பனூரின் நீர்பிடிப்புப் பகுதியின் பரப்பு 216.5 ஏக்கர் ஆகும். இந்த அணை முழு கொள்ளளவை எட்டினால் குரிசிலாப்பட்டு அணைக்கட்டு வழியாக நீர்வரத்துக் கால்வாய் மூலம் 14 ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பப்படும். இதன் மூலம் சுமார் 2,055 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும். கால்வாய் மூலம் நேரடியாக 2,970 ஏக்கர் புன்செய் நிலமும், ஏரிகள் மூலம் 2,055 ஏக்கர் நன்செய் நிலமும் என மொத்தம் 5,025 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த ஜூன் மாதம் 19-ம் தேதி அணையில் இருந்து 40 மில்லியன் கன அடி நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது பெய்து வரும் தொடர் மழையால் ஆண்டியப்பனூர் அணை நீர்மட்டம் 98.86 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 112.2 மில்லியன் கன அடியாகும். 8 மீட்டர் உயரம் கொண்டது.

அணை முழுமையாக நிரம்பி உபரி நீர் வெளியேறி சின்ன சமுத்திரம், வெள்ளேரி, மாடப்பள்ளி ஏரி வழியாக சென்று அங்கிருந்து இரு கிளைகளாக பிரிந்து ஒரு கிளை செலந்தம்பள்ளி,கோனேரிகுப்பம், கம்பளிக்குப்பம், முத்தம்பட்டி, ராட்சமங்கலம், பசலிக்குட்டை ஏரி வழியாக சென்று பாம்பாற்றை அடையும். மேலும், மற்றொரு கிளையாக கணமந்தூர், புதுக் கோட்டை ஏரி வழியாக சென்று திருப்பத்தூர் பெரிய ஏரி நிரம்பி அங்கிருந்து பாம்பாற்றை அடையும்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப் பாட்டில் மொத்தம் 49 ஏரிகள் உள்ளன. தொடர் மழை காரணமாக தற்போது சிம்மணபுதூர் ஏரி, பொம்மிக்குப்பம் ஏரி, மாடப்பள்ளி ஏரி, பெருமாம்பட்டு ஏரி, ஜடை யனூர் ஏரி, உதயேந்திரம் ஏரி, விண்ணமங்கலம் ஏரி, பசிலிக் குட்டை ஏரி, துளசிபாய் ஏரி உள்ளிட்ட மொத்தம் 10 ஏரிகள் முழுமையாக நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது.

அதேபோல, 3 ஏரிகளில் 90 சதவீதம் தண்ணீரும், 2 ஏரிகளில் 75 சதவீதம் தண்ணீரும், 6 ஏரிகளில் 50 சதவீதம் தண்ணீரும் உள்ளன. மற்ற ஏரிகளில் 25 சதவீத தண்ணீரே உள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் அடுத்த சில நாட்களுக்கும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் அடுத்த ஒரு சில நாட்களில் கூடுதலாக ஏரிகள் நிரம்ப வாய்ப்புள்ளது என எதிர் பார்க்கிறோம்’’ என்றார்.

கடந்த முறையை போல ஆண் டியப்பனூர் அணை நிரம்பினால் பாசன வசதிக்காக தண்ணீர் திறக்க வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடபுதுப்பட்டு பகுதியில் அதிகபட்ச மழை

கடந்த சில நாட்களாக திருப்பத்தூர் மாவட்டத்தில் மிதமான மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டம் முழுவதும் பதிவான மழையளவு விவரம்:

ஆலங்காயம் 38 மி.மீ., ஆம்பூர் 41 மி.மீ., வடபுதுப்பட்டு 51.6 மி.மீ., நாட்றாம்பள்ளி 13.3 மி.மீ., கேத்தாண்டப்பட்டி 13 மி.மீ., வாணியம்பாடி 23 மி.மீ., திருப்பத்தூர் 15.1 மி.மீ., என மழையளவு பதிவாகியிருந்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்