திருவண்ணாமலை மாவட்டத்தில் 35 உள்ளாட்சி பதவிகளுக்கு, 77 மையங்களில் வரும் 9-ம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் 31,555 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
தி.மலை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 3 ஒன்றியக் குழு உறுப்பினர் பதவி, 11 ஊராட்சி மன்ற தலைவர் பதவி மற்றும் 52 வார்டு உறுப்பினர் பதவி என 66 பதவிகளுக்கு வரும் அக்டோபர் 9-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
3 ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு திமுக, அதிமுக வேட்பாளர்கள் உட்பட 21 பேரும், 11 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 36 பேரும், 52 வார்டு உறுப்பினர் பதவிக்கு 117 பேரும் என மொத்தம் 174 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையில் 4 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 170 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.
போட்டியின்றி 31 பேர் தேர்வு
இதையடுத்து, ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்த 8 பேரும், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்த 14 பேரும், வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்த 30 பேரும் என மொத்தம் 52 பேர், தங்களது வேட்பு மனுக்களை திரும்ப பெற்றுக் கொண்டனர். 118 வேட்பு மனுக்கள் இறுதி செய்யப்பட்டன. இதில், துரிஞ்சாபுரம் ஒன்றியம் கோவூர், பெரியகிளாம்பாடி, சானானந்தல், கலசப்பாக்கம் ஒன்றியம் சேங்கபுத்தேரி மற்றும் வெம்பாக்கம் ஒன்றியம் இருமரம் ஆகிய 5 ஊராட்சி மன்ற தலைவர்களும் மற்றும் 26 வார்டு உறுப்பினர்களும் 31 பதவிகளுக்கு போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
87 பேர் தேர்தலில் போட்டி
இதைத்தொடர்ந்து, செய்யாறு ஒன்றியம் 10-வது வார்டு, பெரணமல்லூர் ஒன்றியம் 12-வது வார்டு, புதுப்பாளையம் ஒன்றியம் 11-வது வார்டு என 3 ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த 3 பதவிகளுக்கு 12 பேர் போட்டியிடுகின்றனர். மேலும், அனக்காவூர் ஒன்றியம் கோட்டகரம், ஆரணி ஒன்றியம் அக்கராபாளையம், செங்கம் ஒன்றியம் இளங்குன்னி, கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் அரும்பாக்கம், வேளானந்தல், போளூர் ஒன்றியம் பொத்தேரி ஆகிய 6 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 16 பேரும் மற்றும் 26 வார்டு உறுப்பினர் பதவிக்கு 59 பேரும் என மொத்தம் 35 பதவிகளுக்கு 87 பேர் போட்டியிடுகின்றனர்.இதற்கான வாக்குப்பதிவு வரும் 9-ம் தேதி நடைபெற உள்ளது. 31,555 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 77 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணியில் 400-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
வாக்குச்சாவடிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். வாக்குச்சாவடிகளுக்கு வாக்குச் சீட்டுகள் மற்றும் தளவாட பொருட்கள் அனைத்தும் நாளை (8-ம் தேதி) கொண்டு செல்லப்பட உள்ளன. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.
வாக்கு எண்ணிக்கை முடிந்ததும், முகவர்கள் முன்னிலை யில் வாக்குப்பெட்டிகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களுக்கு கொண்டு செல்லப் படும். வாக்கு எண்ணிக்கை வரும் 12-ம் தேதியன்று 15 மையங்களில் நடைபெற உள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago