தவழும் மாற்றுத்திறனாளிகளுக்கு பெரிதும் உதவும் வகையில்
புதிய தொழில்நுட்பத்தினாலான கழிவறைச் சாதனத்தை மதுரை பீபி.குளத்தைச் சேர்ந்த எலக்ட்ரீஷியன் எம். அப்துல் ரசாக் (50) வடிவமைத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
பொது இடங்களுக்குச் செல்லும் மாற்றுத்திறனாளிகள் இந்தியன் டாய்லெட்டை பயன்படுத்துவதில் பெரிதும் சிரமப்படுகின்றனர். மாற்றுத்திறனாளிகள், முதியோர் பயன்படுத்தும் வகையில் தனியார், அரசு அலுவலகங்களில் தற்போது வெஸ்ட்ன் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், போதிய பராமரிப்பின்மையால் அவை பயன்படுத்த முடியாத அளவுக்கு சுகாதாரக்கேடாக உள்ளது. இதனால், இருந்தும் பயன்படுத்த முடியாத நிலைதான்.
முதியோர், நோயாளிகள், கால் மூட்டு பாதிக்கப்பட்டோர் குறிப்பாக தவழும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் மேலிருந்து கீழாகவும் கீழிலிருந்து மேலாக உயரத்துக்கு ஏற்ப இறக்கி ஏற்றிக்கொள்ளும் வகையில் கழிவறைக் கோப்பையை வடிவமைத்துள்ளேன்.
சுமார் 8 அடி உயர இரும்புக் கம்பியில் 2 இன்ச் அளவில் கழிவறைக் கோப்பையைப் பொருத்தி உள்ளேன். இதில் ஹைட்ராலிக் முறையைப் பயன்படுத்தி உள்ளேன். இந்த புதிய வடிவமைப்பை ரூ.5 ஆயிரத்தில் ஏற்படுத்தித் தர முடியும். நன்கொடையாளர்கள் மூலம் வசதியற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இவ்வசதியை உருவாக்கித் தர திட்டமிட்டுள்ளேன். இந்த உபகரணத்தைப் பயன்படுத்தியே ஒரே இடத்தில் மலம் கழித்தல், குளித்தல், சிகை அலங்காரம் செய்தல் போன்ற வசதிகளை உருவாக்கலாம், என்று கூறினார்.
மாற்றுத்திறனாளி பி.சண்முகவேல் கூறுகையில், ‘‘ 2006-ல் விபத்தில் வலது காலை இழந்தேன். செயற்கை கால் பொருத்தி ஆட்டோ ஓட்டுகிறேன். சாதாரண கழிவறைகளில்
இயற்கை உபாதைகளை கழிப்பதில் சிரமப்படுகிறேன். வெளியிடங்களில் வெஸ்டன் டாய்லெட் வசதி பெரும்பாலும் இருப்ப தில்லை. ரசாக் வடிவமைத்துள்ள புதிய கழிவறைக் கோப்பை உபகரணத்தை பொது இடங்களில் பொருத்தலாம். மேலும், என்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகள், முதியோர் வசிக்கும் வீடுகளில் பொருத்தினால் பயனுள்ளதாக இருக்கும். அதிலும் தவழும் மாற்றுத்திறனாளிகளுக்குப் பேருதவியாக இருக்கும்’’ என்றார்.
ஏற்கெனவே இவர் தண்டவாள விரிசல் கண்டறிதல், ராணுவ வீரர்களுக்கான கடுங்குளிர் தாங்கும் கோட், ரைஸ் குக்கர், கடல் நீரில் ஆயிலை பிரித்தெடுக்கும் கருவி உள்ளிட்ட பல்வேறு கருவிகளை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago