ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிவு :

By மனோஜ் முத்தரசு

ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர் சரிவை சந்தித்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆதிதிராவிடர் நலனுக்காக 2021-2022-ம் நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட ரூ.4,142.34 கோடியில், ரூ.3,480.24 கோடி கல்வி சார்ந்ததிட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுஉள்ளது. கல்வி உதவித்தொகை, கல்விக் கட்டணச் சலுகைகள், பரிசுத்தொகை திட்டம், விடுதி வசதிகள் வழங்கப்படுகின்றன.

இதுதவிர, பள்ளிக் கல்வித் துறையால் மிதிவண்டிகள், பாடப்புத்தகம் உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது. இருந்தபோதிலும் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, மாணவர் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.

2014-ம் ஆண்டில் நலப் பள்ளிகளில் 1.28 லட்சம் பேரும் 2015-ல் 1.23 லட்சம் பேரும் 2016-ல்1.16 லட்சம் பேரும் 2017-ல் ஒரு லட்சத்து 6,390 மாணவர்களும் பயின்று வந்தனர். 2018-ல் 98,246 பேர், 2019-ல்92,756 பேர் என சேர்க்கை எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சிஅடைந்தது. தற்போது 1,138 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் 83,259 மாணவர்கள் மட்டுமேபயின்று வருகின்றனர்.

இது தொடர்பாக ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளின் விடுதிகள், வகுப்பறைகள், கழிவறைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பழுதடைந்தும், முறையான பராமரிப்பு இல்லாமலும் உள்ளன.

கரோனா பாதிப்பு காரணமாக மூடப்பட்ட பல பள்ளிகளின் வளாகம் புதர்மண்டிக் கிடக்கிறது. மேலும், ஆங்கில வழி, நவீன கணினி மையம், ஆய்வகம், ஹைடெக் லேப் என அரசுப் பள்ளிகளில் தரம் உயர்ந்து வரும் நிலையில், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளோ 20 ஆண்டுகள் பின்னோக்கிய நிலையில் உள்ளது.

உட்கட்டமைப்பு மேற்பார்வை அனைத்தும் வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதே இதற்கு முக்கியக் காரணமாகும். இதனால்,தனியார் அல்லது அரசு உதவிபெறும் பள்ளிகளை பெற்றோர் நாடுகின்றனர். குறிப்பாக, 833தொடக்கப் பள்ளிகள், 99நடுநிலை, 108 உயர் நிலை மற்றும் 98 மேல்நிலைப் பள்ளிகளில் 35 சதவீதத்துக்கும் அதிகமான ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. பின்தங்கிய பொருளாதார நிலையால் இணையவழிக் கல்வி எட்டாக் கனியாகிவிட்டது. இந்தப் பள்ளி ஆசிரியர்களில் பலர் மாணவர்களின் கல்வி சார்ந்த பணிக்குஎந்த முக்கியத்துவமும் அளிக்காததால், மாணவர் சேர்க்கை குறைந்துவருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைமுதன்மைச் செயலர் கே.மணிவாசன் கூறும்போது, “ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளின் சேர்க்கை சரிவு குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக 150 பள்ளிகளின் உள்கட்டமைப்பை வலுப்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சேர்க்கை சரிவைஓரிரு ஆண்டில் சரி செய்துவிட முடியாது. அவற்றை சரி செய்வதற்காக ஏராளமான மேம்பாட்டுத் திட்டங்கள் வரும் காலங்களில் செயல்படுத்தப்பட உள்ளன.

ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளை விட்டு வெளியேறிய மாணவர்கள், படிப்பைத் தொடர்கிறார்களா இல்லையா என்பது குறித்துமுழுமையான ஆய்வு நடத்தப்படும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்