கவுந்தப்பாடியில் 2-வது நாளாக பெய்த கனமழையால் சுவர் இடிந்து விழுந்ததில் விவசாயி உயிரிழந்தார்.
ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், இரு மாவட்டத்திற்கு உட்பட்ட நீர் நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஒரு சில ஏரிகள் நிரம்பியுள்ளன. தொடர் மழையால் வெப்பத்தின் தாக்கம் தணிந்துள்ளது.
கவுந்தப்பாடியில் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த 30-ம் தேதி இரவு ஒரே நாளில் 144 மி.மீ. மழை பெய்தது.
இதனால் கவுந்தப்பாடி அதன் சுற்றுவட்டாரத்தில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 2-வது நாளாக கவுந்தப்பாடியில் மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கவுந்தப்பாடியில் 44.4 மி.மீ., மழை பெய்தது. இம்மழையால் நேற்று காலை கவுந்தப்பாடி அருகே பச்சப்பாளி, ஆவாரங்காடு பகுதியைச் சேர்ந்த விவசாயி பழனியப்பன் ( 68) என்பவரின் மாட்டுத் தொழுவம் இடிந்து விழுந்தது. அப்போது தொழுவத்தில் வேலை செய்து கொண்டிருந்த பழனியப்பன் கட்டிட இடிபாடுகளில் சிக்கினார்.
அவரை அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 3 ஆடுகளும் இறந்தன. சம்பவம் குறித்து கவுந்தப்பாடி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோட்டில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையளவு: (மி.மீ.,)
கவுந்தப்பாடி 44.4, பவானிசாகர் 29.8, கொடிவேரி 27.4, பெருந்துறை 27, சென்னிமலை 21, கோபி 16.4, நம்பியூர் 14, குண்டேரிபள்ளம் 10.2, தாளவாடி 4, சத்தியமங்கலம் 4, ஈரோடு 2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையளவு(மி.மீ.) மோகனூர் 59, நாமக்கல் 30, ராசிபுரம் 36.20, புதுச்சத்திரம் 13, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 10, சேந்தமங்கலம் 7, எருமப்பட்டி, மங்களபுரம், திருச்செங்கோடு, கொல்லிமலை செம்மேடு ஆகிய இடங்களில் தலா 5 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago