ஈரோடு மாவட்டத்தில் இன்று 95 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு :

By செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்டத்தில் இன்று நடைபெறும் கரோனா தடுப்பூசி முகாமில் 95 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 4-ம் கட்ட கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி தலைமை வகித்துப் பேசியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் இன்று நடைபெறும் 4-வது கட்ட சிறப்பு கரோனா தடுப்பூசி முகாமில் 95 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், 577 முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

இதற்காக அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலர், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஆகியோர் முகாமுக்கான இடங்களை தேர்வு செய்ய வேண்டும். தடுப்பூசி செலுத்த வருபவர்களின் விவரங்களை பதிவு செய்ய அந்தந்த பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களை பயன்படுத்தலாம். இப்பணியில் தன்னார்வலர்கள் ஈடுபாடு காட்ட வேண்டும், என்றார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சோமசுந்தரம், மாநகராட்சி நகர் நல அலுவலர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் 64 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதில் 20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, என மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் தெரிவித்தார்.

நாமக்கல்லில் 460 மையம்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 460 மையங்களில் 58,000 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி போடப்பட உள்ளது, என மாவட்ட சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

இதுபோல் நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 20 மையங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது, என நகராட்சி ஆணையர் பொன்னம்பலம் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்