கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக பரவலாக மழை பெய்தது. இதனிடையே பாரூர் பகுதியில் உள்ள 10 ஏரிகள் நிரம்பின. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக கிருஷ்ணகிரி, ஓசூர், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, வேப்பனப்பள்ளி உட்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதலே பல இடங்களில் சாரல் மழை பெய்தது.
தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும், மதியம் 2 மணியளவில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது.
தற்போது, நிலக்கடலை சாகுபடி மேற்கொண்டுள்ள விவசாயிகள் தொடர் மழையால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நேற்று காலை 8 மணி நிலவரப்படி மழையளவு (மில்லிமீட்டரில்) விவரம்: ஊத்தங்கரை 78.4, தேன்கனிக்கோட்டை 40, சூளகிரி 13, நெடுங்கல் 11, போச்சம்பள்ளி 10, கிருஷ்ணகிரி 7.2 மிமீ மழை பதிவானது.
10 ஏரிகள் நிரம்பின
கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று காலை நீர்வரத்து விநாடிக்கு 347 கனஅடியாக இருந்தது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் 50.90 அடிக்கு தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றிலும், இடது மற்றும் வலதுபுறக்கால்வாயில் முதல்போக பாசனத்துக்கு விநாடிக்கு 347 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.பரவலாக பெய்து வரும் மழையால், அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரிக்கும் எனவும், தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதேபோல பாரூர் ஏரியில் மொத்த உயரமான 15.60 அடியில் 15.30 அடிக்கு தண்ணீர் உள்ளது. ஏரிக்கு விநாடிக்கு 171 கனஅடி நீர்வரத்து உள்ளது. ஏரியில் இருந்து பாசனத்துக்கும், இணைப்பு ஏரிகளுக்கும் கால்வாய் வழியாக விநாடிக்கு 171 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
பாரூர் ஏரியின் கீழ் உள்ள 10 ஏரிகள் 100 சதவீதமும், 4 ஏரிகள் 25 முதல் 75 சதவீதம் வரை தண்ணீர் நிரம்பி உள்ளது. 2 ஏரிகளில் 25 சதவீதத்துக்கும் கீழ் தண்ணீர் உள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago