குமரியில் காந்தி அஸ்தி கட்டத்தில் அமைச்சர், ஆட்சியர் மரியாதை :

By செய்திப்பிரிவு

மகாத்மா காந்தியடிகளின் 153-வதுபிறந்த தினத்தை முன்னிட்டு மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் உள்ள அவரது அஸ்தி கட்டத்தில் இருக்கும்படத்துக்கு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மாலை அணிவித்து மரியாதைசெலுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், எஸ்.பி. பத்ரிநாராயணன், விஜயகுமார் எம்.பி., முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி கங்காராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

அமைச்சர் கூறும்போது, “கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் காந்தியடிகளின் பீடத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் 2-ம்தேதி அபூர்வ சூரிய ஒளி விழும். இதனைக் காண உள்ளூர் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவர்.

ஆனால், தற்போது தமிழகஅரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியில்லை. இருந்தபோதிலும் 75-வது சுதந்திர தினத்தை நினைவுகூர்கின்ற வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் காந்தியடிகளின் 153-வதுபிறந்தநாள் எளிமையாக கொண்டாடப்பட்டது. காந்தியின் தியாகம், அமைதி மார்க்கத்தை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். இதுவே அவருக்கு பெருமை சேர்ப்பதாக அமையும்” என்றார்.

காமராஜர் சிலைக்கு மரியாதை

காமராஜரின் 46-வது நினைவு நாளையொட்டி கன்னியாகுமரியில் அவரது மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ், மற்றும் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், கன்னியாகுமரி டிஎஸ்பி ராஜா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜாண் ஜெகத் பிரைட், மாவட்ட சுற்றுலா அலுவலர் சீத்தாராமன் உட்பட பலர் மரியாதை செலுத்தினர்.

திருநெல்வேலி

அரிஜன, புனித யாத்திரை நிகழ்வில் கலந்துகொள்வதற்காக திருநெல்வேலி வந்த காந்தியடிகள் டவுனில் உள்ள தேசபக்தர் சாவடிகூத்த நயினார் பிள்ளை இல்லத்தில் 1934-ம் ஆண்டு ஜனவரி 23, 24 ஆகிய 2 நாட்கள் தங்கியிருந்தார். அவர்களின் விருந்தோம்பலில் மகிழ்ந்து மேலும் ஒரு நாள் தங்கினார்.

காந்தியடிகள் தங்கியிருந்த அறை புனிதமாக கருதிபாதுகாக் கப்பட்டு வருகிறது. அந்த அறையில்காந்தியின் 153-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. காந்தியின் உருவப் படத்துக்கு பாரதியார் உலக பொது சேவை நிதிய தலைவர் அ.மரியசூசை, டான்சிட்டி அரிமா சங்க பட்டயத் தலைவர் ஜானகிராம் அந்தோணி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சாவடி கூத்த நயினார் பிள்ளை பேரன் கூத்த நயினார் என்ற செந்தில் வரவேற்றார். டான்சிட்டி லயன்ஸ் சங்கத் தலைவர் எம்.சி. ராஜன், பாரதியார் உலக பொதுமன்ற பொதுச் செயலாளர் கோ. கணபதி சுப்பிரமணியன், தமிழ் நலக்கழக மாவட்டத் தலைவர் பாப்பாக்குடி இரா.செல்வமணி, சிவப்பிரகாசர்நற்பணி மன்ற துணைச் செயலாளர் சு.முத்துசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சாவடி கூத்த நயினார் பிள்ளை பேத்தி தமிழாசிரியை ஆவுடைச்செல்வி நன்றி கூறினார்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு கனிமொழி எம்.பி., சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஸ்ருதஞ் ஜெய் நாராயணன், மக்கள் தொடர்பு அலுவலர்ஜெகவீரபாண்டியன் மற்றும் அலுவலர்கள் மாலை அறிவித்து மரியாதை செலுத்தினர். கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் அறக்கட்டளை பொருளாளர் எஸ்.வீரபெருமாள் மாலை அணிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்