திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க கூடுதலாக 16 சிறப்பு குழுக்களை அமைத்து மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன், மாவட்ட வரு வாய் அலுவலர் தங்கையா பாண்டியன், சார் ஆட்சியர் அலர் மேல்மங்கை, வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா பேசும்போது ‘‘மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் நடைபெறும் நாள் வரை தினசரி காலை 6 மணி முதல் 9 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் செயல்படும் வகையில் 16 சிறப்பு குழுக்கள் கூடுதலாக அமைக்கப் படுகிறது.
மாநில மற்றும் மாவட்ட எல்லை சோதனைச் சாவடிகளில் கூடுதலாக காவலர்களை நியமனம் செய்து கண்காணிக்க வேண்டும். அரசியல் கட்சி பிரமுகர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளி மற்றும் கரோனா விதிகளை கடைபிடிக்க வேண்டும். விதிகளை பின்பற்றாத நபர்களிடம் கட்டாயமாக அபராதம் வசூலிக்க வேண்டும்.
மாவட்டத்தில் தபால் வாக்குகள் பெறுவதற்கு தபால் ஓட்டுப் பெட்டிகள் சரியான முறையில் அமைத்து கொடுக்க வேண்டும். வாக்குச்சாவடிகளில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். வாக்குப் பதிவு நடைபெறும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் வரும் 13-ம் தேதி வரை மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும்’’ என தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago