கூட்டு குடும்ப வாழ்க்கை முறை சிதைந்து போனதால் - அன்புக்கும், பாசத்துக்கும் முதியவர்கள் ஏங்குகின்றனர் : ஆட்சியர் பா.முருகேஷ் வேதனை

கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை சிதைந்து போனதால் அன்புக்கும், பாசத்துக்கும் முதியவர்கள் ஏங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது என ஆட்சியர் பா.முருகேஷ் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் சர்வதேச முதியோர் தின விழா திருவண்ணாமலையில் உள்ள கிரேஸ் முதியோர் இல்லத்தில் நேற்று நடைபெற்றது. ஆட்சியர் பா.முருகேஷ் தலைமை வகித்து, முதியோர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசும்போது, “வயதான காலத்தில் தனக்கு தேவையான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றை பெறுவதற்காக, போராட வேண்டிய நிலையில் முதியோர் உள்ளனர். முதியோர்களை கவுரவத்துடனும், நேர்மையுடனும், மென்மையாகவும் வழி நடத்த வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது. கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை சிதைந்து போனதால், வயதான காலத்தில் ஆதரவு இல்லாமல் தனித்து விடப்பட்டுள்ளனர். அன்புக்கும், பாசத்துக்கும் ஏங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

அக்டோபர் 1-ம் தேதி கொண்டாடப்படும் சர்வதேச முதியோர் தினத்துக்கு, ஒவ்வொரு ஆண்டும் ஒரு தலைப்பை ஐநா சபை சூட்டுகிறது. அதன்படி இந்தாண்டு, அனைத்து வயதி னருக்கும் டிஜிட்டல் சமத்துவம் என்ற தலைப்பை சூட்டி உள்ளது. ஆதரவு இல்லாமல் தவிக்கும் முதியவர்கள் குறித்து தெரிய வந்தால், கட்டணம் இல்லாத தொலைபேசி எண்ணான ‘14567’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE