கட்டிடக் கழிவு மறுசுழற்சி மையம் திட்டத்துக்கு புத்துயிர் அளிக்க திட்டம் : கழிவுகளை கட்டுமானப் பொருட்களாக மாற்ற முடிவு

By பெ.ஸ்ரீனிவாசன்

கோவை மாநகராட்சி பகுதிகளில் குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் மற்றும் சாலையோரங்களில் கட்டிடக் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்கும் வகையில் பிரத்யேகமாக கட்டிடக் கழிவுகள் மறுசுழற்சி மையம் அமைக்கும் திட்டத்துக்கு புத்துயிர் அளிக்கப்பட உள்ளது.

கோவையில் தொழில் துறை சார்ந்தும், மக்களின் குடியிருப்புகள் சார்ந்தும் பழைய கட்டிடங்களை இடித்து விட்டு, புதிய கட்டிடங்களை கட்டுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் டன் கணக்கில் கட்டிடக் கழிவுகள் உருவாகின்றன.

கட்டிடக் கழிவுகள் பயன்பாட்டில் இல்லாமல் போன பாழடைந்த கிணறுகள், பள்ளங்களை மூட பயன்படுத்தப்படுகின்றன. முறையாக கட்டிடக் கழிவுகளை அப்புறப்படுத்த இயலாத பலர், அவற்றை குளக்கரைகளில் கொட்டி வருகின்றனர்.

இதை தடுக்க, கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த 2017-ம் ஆண்டு மறுசுழற்சி மையம் அமைக்க திட்டமிடப்பட்டு, 2018-ம் ஆண்டு ஒப்பந்தம் கோரப்பட்டது. சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் கட்டிடக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டது. கோவை உக்கடம் கழிவுநீர்ப் பண்ணை வளாகத்துக்கு செல்லும் வழியில் 15 ஏக்கர் பரப்பில் மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டதோடு, கட்டிடக் கழிவுகளை சேகரிக்க 17 இடங்கள் அறிவிக்கப்பட்டன.

ஆனால், நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் தொடர்புடைய நிறுவனம் பணியைத் தொடங்காத காரணத்தால், கடந்த 2019-ம் ஆண்டில் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. அதோடு புதிய நிறுவனமும் தேர்வு செய்யப்படவில்லை. இதனால் கோவையில் சாலையோரங்கள், நீர்நிலைகளில் கட்டிடக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்கும் திட்டம் கேள்விக்குறியானது.

திட்டம் அவசியம்

இதுகுறித்து, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இரா.மணிகண்டனிடம் கேட்டபோது, “கோவை மாவட்டத்தில் குளம், குட்டைகள் மற்றும் நீர்வழித் தடங்களில் கட்டிடக் கழிவுகளை கொட்டுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிச்சி குளத்தில் நீர்ப்பிடிப்பு பகுதியின் பரப்பளவு குறைந்துள்ளது. இதனைத் தடுக்க நிச்சயமாக ஒரு திட்டம் வேண்டும். அதுவரை கழிவுகளை கொட்ட பாறைக்குழி போன்ற இடங்களை மாநகராட்சி ஏற்பாடு செய்யலாம்” என்றார்.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “தூய்மை இந்தியா 2.0 திட்டத்தை மத்திய அரசு விரைவில் செயல்படுத்தவுள்ளது. அத்திட்டத்துக்கான வழிகாட்டி வரைவு மத்திய அரசிடமிருந்து கோவை மாநகராட்சிக்கு வரப்பெற்றுள்ளது. அதில் கோவையில் கட்டிடக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் திட்டத்துக்கு ஒதுக்கீடு உள்ளது.

வழிகாட்டி வரைவு இறுதி செய்யப்படும்போது நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும். அதற்காக காத்துக் கொண்டிருக்கிறோம். மறுசுழற்சி செய்யப்படும் கட்டிடக் கழிவுகள் மூலமாக பேவர் பிளாக் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்வதன் மூலமாக மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்கவும் வழிவகை செய்யும் திட்டம் உள்ளது” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்