சேலத்தில் ரவுடிகளை கண்காணிக்க இருசக்கர வாகனத்தில் போலீஸார் ரோந்து :

சேலம் மாநகரில் ரவுடிகளை கண்காணிக்க இருசக்கர ரோந்து வாகன பேரணியை மாநகர காவல் ஆணையர் நஜ்மல் ஹோடா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ரவுடிகளை கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். மேலும் அனைத்துப் பகுதிகளிலும் காவல்துறையினர் ரோந்து சென்று கண்காணித்து, சமூக விரோதிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார்.

இதையடுத்து சேலம் மாநகராட்சிப் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக அனைத்துப் பகுதியிலும் காவல்துறையினர் ரோந்து சென்று ரவுடிகளை கைது செய்து வருகின்றனர். மேலும், மாநகரில் அனைத்துப் பகுதிகளிலும் காவல்துறையினர் இரு சக்கர வாகனத்தில் ரோந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சேலம் வடக்கு, தெற்கு, மேற்கு ஆகிய மூன்று சரகத்திலும் 44 இரு சக்கர ரோந்து வாகன பேரணி நேற்று நடந்தது. சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானா அருகே தொடங்கிய ரோந்து வாகன பேரணியை மாநகர காவல் ஆணையர் நஜ்மல் ஹோடா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறும்போது, ‘குற்றச்சம்பவங்களை தடுக்கவும், ரவுடிகளை கண்காணிக்கவும் சேலம் மாநகர் முழுவதும் தினமும் மாலை 5 மணி முதல் இருசக்கர ரோந்து வாகனத்தில் காவல்துறையினர் ஒவ்வொரு பகுதியாக சென்று கண்காணித்து குற்றங்களைத் தடுக்க உள்ளனர். ரவுடிகளை கட்டுப்படுத்த ரோந்து வாகனம் மிகவும் உறுதுணையாக இருக்கும். குட்கா, லாட்டரி, கஞ்சா உள்ளிட்டவை கடத்தி, விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார்.

நிகழ்வில் கூடுதல் காவல் ஆணையர் கும்மராஜா, காவல் துணை ஆணையர் மோகன்ராஜ் மற்றும் உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்