கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல் :

கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 12 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸார், லாரி ஓட்டுநரை கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி, எஸ்.ஐ. தென்னரசு, ஆகியோர் நேற்று முன்தினம் நள்ளிரவில் சூளகிரி காமன்தொட்டி சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பேரிகை கூட்ரோடு அருகே வந்த லாரியை நிறுத்தினர். அதில் 240 மூட்டைகளில், 12 டன் ரேஷன் அரிசியை கடத்திச் சென்றது தெரிந்தது. விசாரணையில் லாரியை ஓட்டி வந்தவர், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை கிழக்கு வளவு பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (30) என்பது தெரிந்தது.

கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரேஷன் அரிசியை வாங்கி சேகரித்து கர்நாடகாவில் அதிக விலைக்கு விற்க முயன்றது தெரிந்தது. இதையடுத்து லாரி ஓட்டுநர் விஜயகுமாரை கைது செய்து லாரியையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

மேலும் லாரி உரிமையாளர் வேப்பனப்பள்ளி சுரேஷ் மற்றும் ரேஷன் அரிசி வாங்க இருந்த கர்நாடக மாநிலம் பங்காருபேட் பகுதியைச் சேர்ந்த தனியார் மில் உரிமையாளர் ஆகியோரை தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE