டெல்டா பகுதியில் உற்பத்தியாகும் தேங்காய் நார் உலகத் தரம் வாய்ந்தது என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் உள்ள இந்திய உணவு பதன தொழில் நுட்ப பயிற்சி நிறுவன கூட்ட அரங்கில், மத்திய அயல்நாட்டு இயக்குநரகம் மற்றும் மாவட்ட தொழில் மையம் சார்பில் ஏற்றுமதி துறைக்கான ஊக்குவிப்பு கூட்ட கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது.
கருத்தரங்குக்கு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். தஞ்சாவூர் எம்.பி எஸ்.எஸ்.பழநி மாணிக்கம் முன்னிலை வகித்தார்.
இந்த கருத்தரங்கில் புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்ற கலைப் பொருட்கள் கண்காட்சியை பார்வையிட்டு மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் செப்.20-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை வர்த்தகம் மற்றும் வணிக வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தின் ஏற்றுமதி திறனை வெளிப்படுத்தும் வகையில் இந்த வழிகாட்டும் கூட்டம் நடத்தப்படுகிறது. தஞ்சா வூர் மாவட்டத்தில் இருந்து ஏற்றுமதி செய்ய ஏதுவாக பாரம்பரிய அரிசி வகைகள், பருப்பு வகைகள், விவசாய விளைபொருட்கள், இயற்கை வழியில் ரசாயன கலப்பற்ற முறையில் உருவாக்கும் அரிசி, தேங்காய் நார் மற்றும் தேங்காயின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், களிமண்பாண்டங்கள் போன்றவை மாவட்ட தொழில் மையத்தில் இனங்காணப்பட்டுள்ளன.
நபார்டு நிறுவனம் தனது திட்டங்கள் மூலம் உழவர் உற்பத் தியாளர் குழுக்களை ஒருங்கி ணைத்து வருகிறது. மேலும் உலகத்தரம் வாய்ந்த தேங்காய் நார், டெல்டா பகுதியில் விளையும் தேங்காய் மட்டையிலிருந்து பெறப்படுகிறது.
எனினும், தேங்காய் நாரிலி ருந்து தயாரிக்கப்படும் மதிப்புக் கூட்டு பொருட்களின் உற்பத்தி போதுமான அளவில் இல்லை. இதைக் கருத்தில் கொண்டு இதில் பெருமளவு முதலீடு செய்ய ஊக்குவிக்கப்பட வேண்டும்.
மேலும், இம்மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் சிறு குறு நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் முறையாக தர நிர்ணயம் செய்யப்பட்டு அதற்குரிய ஆய்வக வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில், வெளிநாட்டு வர்த்தக இணை இயக்குநரக உதவி பொது இயக்குநர் பாக்கியவேலு, இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப பயிற்சி நிறுவன இயக்குநர் அனந்தராமகிருஷ்ணன், முன்னோடி வங்கி மேலாளர் சீனிவாசன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சகுந்தலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago