கொற்கையில் ‘சைட்’ மியூசியம் அமைக்க வேண்டும் : வைகுண்டம் எம்எல்ஏ.விடம் கோரிக்கை

By செய்திப்பிரிவு

கொற்கையில் ‘சைட்’ மியூசியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜிடம் தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தமிழக தொல்லியல் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கொற்கையில் கடந்த பிப்.26-ம் தேதி அகழாய்வுப் பணி தொடங்கியது. இதுவரை 500-க்கும் மேற்பட்ட பழங்காலப் பொருட்கள் இங்கு கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் வைகுண்டம் தொகுதி எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ், கொற்கையில் நடைபெறும்அகழாய்வுப் பணியை பார்வையிட்டார். அங்கு கண்டுபிடிக்கப்பட்ட சுடுமண்ணால் செய்த திரவப்பொருட்கள் வடிகட்டும் குழாய், செங்கல் கட்டுமான அமைப்பு, இரண்டடுக்கு கொள்கலன் இருந்த இடம் ஆகியவற்றை பார்த்தார். தொல்லியல் அலுவலர் காளீஸ்வரன் அவருக்கு அகழாய்வுப் பணி குறித்து விளக்கினார்.

தொடர்ந்து, எம்எல்ஏவிடம் தொல்லியல் ஆர்வலர்கள் கொற்கை மற்றும் சிவகளையில் சைட் மியூசியம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 1966-ல் அப்பகுதிகளில் நடைபெற்ற அகழாய்வின் போது கிடைத்த பொருட்கள் தற்போது எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை. ஆய்வு முடிந்து குழியை மூடிவிட்டால் அகழாய்வு நடந்த இடம் எது எனத் தெரியாமல் போய் விடும். எனவே, கொற்கையின் பெருமையை அடுத்து வரும் தலைமுறைகளுக்கும் உணர்த்தும் விதமாக அகழாய்வு நடைபெற்ற இடத்தில் சைட் மியூசியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

எம்.எல்.ஏ. கூறும்போது, ‘‘சிவகளை மற்றும் கொற்கையில் சைட் மியூசியம் அமைப்பது தொடர்பாக முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்படும்’’ என்றார்.

அப்போது ஏரல் வட்டாட்சியர் இசக்கிராஜன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்