12 ஜேசிபி இயந்திரங்கள், 200 பணியாளர்கள் மூலம் - தூத்துக்குடியில் பக்கிள் ஓடை தூர் வாரும் பணி : கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்

By செய்திப்பிரிவு

தூய்மையான தூத்துக்குடி திட்டத்தின் கீழ் திரேஸ்புரம் பகுதியில் பக்கிள் ஓடை தூர் வாரும் பணியை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கடந்த ஒரு வாரமாக கழிவுநீர் கால்வாயில் மண் அதிகமாக தேங்கியுள்ள பகுதிகளில் துப்புரவு பணியாளர்கள் மூலம் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் உள்ள பக்கிள் ஓடையை 12 ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் 200 பணியாளர்கள் சுத்தம் செய்து வருகின்றனர்.

மழைக்காலம் வர இருப்பதால் பக்கிள் ஓடை வழியாகத்தான் தண்ணீர் கடலுக்கு செல்லும். பக்கிள் ஓடையை சுத்தம் செய்வதன் மூலம் மழைக் காலத்தில் மண் அடைப்பு ஏதும் இல்லாமல் தண்ணீர் முழுவதுமாக வெளியேறிவிடும்.

இதுபோல் நீர்வழிப் பாதைகள் அனைத்தும் சுத்தம் செய்யப்படும். மாநகராட்சி பகுதியில் சுமார் 5,000 பேர் மூலம் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. எதிர் வரும் மழைக் காலங்களில் தெருக்களில் தண்ணீர் தேங்கி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என்றார்.

தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட சுப்பையா பூங்கா பகுதியில் ரூ.33.40 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையக்கட்டிடத்தை எம்.பி., அமைச்சர் பெ.கீதாஜீவன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

ரூ.1.38 கோடியில் நலத்திட்ட உதவி

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் 53 பேருக்கு ரூ.3.36 லட்சம் மதிப்பீட்டில் தையல் இயந்திரம், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோறில் ஒருவரை இழந்த 45 குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.1.35 கோடி நிவாரணத் தொகை ஆகியவற்றை கனிமொழி எம்.பி., அமைச்சர் பெ.கீதாஜீவன், மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினர்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், எம்எல்ஏக்கள் ஜீ.வி.மார்க்கண்டேயன், எம்.சி.சண்முகையா, மாவட்ட வருவாய் அலுவலர் சு.கண்ணபிரான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்