மருத்துவப் பணிக்கு செல்வோர், நோயாளிகள் சிக்கி தவிப்பு - கோரிப்பாளையத்தில் ‘ஃப்ரீ லெப்ட் ’வசதி ஏற்படுத்தப்படுமா? :

By என்.சன்னாசி

மதுரை நகரில் வாகனங்களின் பெருக்கத்துக்கேற்ப போதிய சாலை, மேம்பாலம் இன்றி வாகனங்களில் செல்வோர் முக்கிய சிக்னல் பகுதிகளை சுலபமாக கடக்க முடியாமல் தினமும் திண்டாடும் நிலை ஏற்பட்டு வருகிறது.

மதுரை நகரில் பிரதான இடங்களில் 12-க்கும் மேற்பட்ட போக்குவரத்து சிக்னல்கள் செயல்படுகின்றன. ஒவ்வொரு சிக்னலிலும் காலை, மாலை நேரங்களில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. ஆனால் இந்த சிக்னல்களை கடக்க நீண்டநேரம் காத்திருக்க வேண்டி உள் ளது. குறிப்பாக கோரிப்பாளையம், பெரியார் பேருந்து நிலையம், காளவாசல், மேலமடை உள்ளிட்ட சிக்னல்களை வாகனங்களில் கடந்து செல்ல மக்கள் படாதபாடு படுகின்றனர். தற்போது நத்தம் பறக்கும் பாலப் பணியால் சின்ன சொக்கிகுளம் சாலையில் தனியார் வணிக வளாகப் பகுதி, திருப்பாலை உள்ளிட்ட இடங்களில் ‘பீக் அவர்ஸில்' வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இந்த இடங்களை கடந்து செல்ல மாற்று வழியும் இல்லை.

மதுரையின் வடக்குப்பகுதியில் இருந்து ரயில், பேருந்து நிலையம், டவுன் பகுதிகளுக்கு செல்ல கோரிப்பாளையம் சந்திப்பு சிக்னலே பிரதான பகுதி ஆகும்.

இந்த சிக்னலை காலை, மாலையில் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. பனகல் சாலையில் அரசு மருத்துவ மனை, பல்நோக்கு மருத் துவமனை, ஆட்சியர் அலுவலகம், மருத்துவக் கல்லூரி இருப்பதால் எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படும்.

கோரிப்பாளையம் சிக்னலில் பனகல் சாலையில் இருந்து ஏவி.மேம்பாலம், ஆழ்வார்புரம் செல்ல இடதுபுறமாக நிற்காமல் செல்ல வசதியுள்ளது. செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோட்டில் இருந்து சொக்கிகுளம், தமுக்கம் செல்லும் வாகனங்கள் இடதுபுறம் சிக்னலில் நிற்காமல் போகின்றன. ஆனால் தமுக்கம் பகுதியில் இருந்து பனகல் சாலையில் அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிக்கு செல்லும் வாகனங்களும், ஆம்புலன்ஸ் களும் சிக்னலில் புறக்காவல் நிலையம் அருகே இடதுபுறமாக திரும்ப முடியாமல் தவிக்கின்றன.

இவ்விடத்தில் ‘ஃப்ரீ லெப்ட்’ போகலாம் என்றாலும், ஏவி. பாலம் நோக்கி செல்லும் வாகனங்கள் அடைத்து நிற்பதால் பனகல் சாலைக்கு எளிதாக திரும்ப முடிவதில்லை. இதை போலீஸாரும் கண்டுகொள்வதில்லை.

அந்த இடத்தில் பனகல் சாலையில் நடந்துசெல்லும் மக்க ளுக்காக குறிப்பிட்ட நிமிடம் ஒதுக்குவதால் இடதுபுறமாக வாகனங்களைத் திருப்ப முடியாமல் தவிப்பதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலமடை சிக்னலில் தனியார் மருத்துவமனை, கே.கே.நகர் சாலைக்குச் செல்ல தடுப்பு அமைத்து ‘ஃப்ரீ லெப்ட்’ வசதி ஏற்படுத்தியது போன்று, தமுக்கம் பகுதியில் இருந்து மருத்துவமனை மற்றும் பனகல் சாலைக்கு ‘ஃப்ரீ லெப்ட் ’ -ல் வாகனங்கள் திரும்ப தடுப்புகள் அமைக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து காவல் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘கோரிப்பாளையம் சந்திப்பு அதிக வாகனங்கள் கடக்கும் சிக்னல் பகுதி. தமுக்கம் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் பனகல் சாலைக்கு திரும்பும் இடத்தில் சாலை குறுகலாக உள்ளது.

அந்த சாலையில் குறிப்பிட்ட தூரம் வரை தடுப்புகள் ஏற் படுத்தினால் நெரிசல் மேலும் அதிகரிக்கும். கோரிப்பாளையம் சிக்னலில் பனகல் சாலைக்கு திரும்பும் இடத்தில் நடைமேடை இருக்கிறது. இருப்பினும், ஆய்வு செய்து வாய்ப்பு இருந்தால் ‘ ‘ஃப்ரீ லெப்ட்’ வசதி ஏற்படுத்த முயற்சிக்கலாம்.' என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்