நல்லூர் விஸ்வேஸ்வரசாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.15 கோடி மதிப்புள்ள நிலத்தை, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நேற்று மீட்டனர்.
திருப்பூர் நல்லூர் விஸ்வேஸ்வரசாமி விசாலாட்சியம்மன் கோயில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோயிலுக்குச் சொந்தமாக 148.36 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்களில் தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்து கோயில் நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, நல்லூர் விஸ்வேஸ்வரசாமி கோயிலுக்கு சொந்தமான, காங்கயம் சாலை நல்லிக்கவுண்டர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள 1.67 ஏக்கர் நிலம் தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்து நேற்று மீட்கப்பட்டது.
திருப்பூர் இணை ஆணையர் நா.நடராஜன் வழிகாட்டுதல்படி, உதவி ஆணையர் வெங்கடேஷ், கோயில் செயல் அலுவலர் செல்வம் பெரியசாமி ஆகியோர் வருவாய் மற்றும் காவல்துறையினர், கோயில் பணியாளர்கள் ஒத்துழைப்போடு நிலத்தை மீட்டனர். அந்த நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்த நபர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் வேலி அமைக்கப்பட்டு, அப்பகுதியில் கோயில் பெயர் பலகையை அறநிலையத்துறை அதிகாரிகள் வைத்தனர். நிலத்தின் மதிப்பு ரூ. 15 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago