மத்திய, மாநில அரசுகள் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால் மதுரை தோப்பூரில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை கட்டுமானப் பணியைத் தொடங்குவதிலும், மாணவர் சேர்க்கையை நடத்துவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தோப்பூர் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை பிரதமர் அடிக்கல் நாட்டியதோடு நிற்கிறது. அதனால், தென் மாவட்ட மக் களிடம் ஏற்பட்ட அதிருப்தியால், கடந்த ஜூலை 16-ம் தேதி மதுரை ‘எய்ம்ஸ்’ நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது. இதில் நடப்பு ஆண்டில் மதுரை ‘எய்ம்ஸ்’ல் 50 எம்பிபிஎஸ் இடங்களுக்கு அனுமதி வழங்கி தற்காலிகக் கட்டிடத்தில் வகுப்புகளை நடத்த தீர்மானிக்கப்பட்டது. ஆனால், இதற்கான வசதிகளை செய்து கொடுப்பதில் எழுந்த சிக்கலால் இந்த ஆண்டும் மாணவர் சேர்க்கை நடப்பது கேள்விக்குறியாகி உள்ளது.
இந்நிலையில் மதுரையுடன் சேர்த்து அறிவித்த தெலங்கானா மாநில பீபீ நகர் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு 2020-ம் ஆண்டிலேயே தற்காலிகக் கட்டிடத்தில் 150 மாணவர்களுக்கான வகுப்புகள் நடக்க ஆரம்பித்தது.
2018-ம் ஆண்டில் அறிவித்த ஜார்கண் டில் கட்டிடம் கட்டுமானப் பணிகள் நிறைவுபெறாவிட்டாலும், அங்கும் 150 மாணவர்களுக்கான எம்பிபிஎஸ் வகுப்புகள் தொடங்கிவிட்டன. இமாச் சலப்பிரதேசம் பிலாஸ்பூரில் அறிவித்த எய்ம்ஸிலும் எம்பிபிஎஸ் வகுப்புகள் தொடங்கிவிட்டன.
மதுரைக்குப் பிறகு 2019-ல் மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கிய அசாம் மாநிலம் கவுகாட்டி, குஜராத் மாநிலம் ராஜ்கோட், ஜம்முவில் சம்பாவிலும் எம்பிபிஎஸ் வகுப்புகள் தொடங்கி நடக்கின்றன. ஆனால், மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே நீடிக்கும் கொள்கை முரண்பாட்டால் மதுரையில் ‘எய்ம்ஸ்’ அமைவதிலும், மாணவர் சேர்க்கையைத் தொடங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இந்நிலையில் வழக்கறிஞர் கா.புஷ்பவனம் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ‘எய்ம்ஸ்’ புறநோயாளிகள் சிகிச்சையை தற்காலிகக் கட்டிடத்தில் தொடங்க வேண்டும். நடப்பு ஆண்டிலேயே எம்பிபிஎஸ் வகுப்புகளைத் தொடங்க வேண்டும், 5 பேர் கொண்ட நிர்வாகக் குழுவை முழுமையாக நியமித்து கட்டுமானப் பணிகளைத் தொடங்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுகுறித்து வழக்கறிஞர் புஷ்பவனம் கூறியதாவது:
2018-ம் ஆண்டு அமைச்சரவை ஒப்புதல் கிடைத்தபோது மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை திட்ட மதிப்பீடு ரூ. 1,264 கோடியாக இருந்தது. தற்போது ரூ.2 ஆயிரம் கோடியைத் தொட்டுவிட்டது. மேலும் தாமதமானால் திட்ட மதிப்பீடு ரூ.2,500 கோடியைத் தாண்டிவிடும்.
இந்நிலையில், மதுரை எய்ம்ஸ்-ல் 50 மாணவர்களை மட்டும் சேர்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற எய்ம்ஸ்களில் 150 மாணவர்களை சேர்க்க அனுமதி வழங்கியுள்ளனர். 2015-ல் தமிழகத்தில் எய்ம்ஸ் இடம் தேர்வில் தொடங்கிய பிரச்சினை, தற்போது கட்டுமானப் பணி, நிர்வாகக் குழுவை அமைப்பது, மாணவர் சேர்க்கை மற்றும் புறநோயாளிகள் சிகிச்சை தொடங்குவது என பல்வேறு தடைகள் ஏற்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து மாநில சுகாதாரத் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘எய்ம்ஸ் மருத்துவமனை முழுக்க மத்திய அரசின் திட்டம். அவர்கள் அமைத்த நிர்வாகக் குழு, மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் டிசம்பர் 31-க்குள் மாணவர் சேர்க்கையைத் தொடங்குவது பற்றி முடிவெடுப்பதாகக் கூறியுள்ளார்கள். அதற்கான வசதிகளை செய்து கொடுக்க தமிழக அரசு தயாராக உள்ளது. கட்டுமானப்பணி தொடங்க இன்னும் ஓராண்டாகலாம். ’’ என்றார்.
இதற்கிடையில் தமிழக பாஜக தலை வர் அண்ணாமலை, மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் 150 மாணவர் களுக்கு மத்திய அரசு வாய்ப்பு அளித்தும் அதனை பயன்படுத்திக் கொள்ள மாநில அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வருந்தத்தக்கது எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரை எம்பி சு.வெங்கடேசன் கூறுகை யில், ‘‘50 மாணவர்களை எம்பிபிஎஸ்-ல்சேர்க்கலாம் என்றும், அதற்கான இடத்தை ஒதுக்கி தரும்படியும் மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால், அதற்கான கட்டிடத்தில் நிறைய வசதிகளை செய்து தரும்படி பட்டியலிட்டுள்ளனர். அதை பார்த்தால் நிரந்தரக் கல்லூரிக்கு தேவை யான பட்டியல்போல உள்ளது. அதற் கான நிதி குறித்து தகவல் எதுவும் இல்லை. மேலும் 50 மாணவர் சேர்க்கைக்கு மருத்துவ கவுன்சிலும் முறையான அனுமதி வழங்கவில்லை. 50 இடங்களை தாங்களே அதிகரித்துக் கொள்ள தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டா?’’ என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago