வீடு, நிறுவனங்களில் - மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உருவாக்க ஆட்சியர் வேண்டுகோள் :

By செய்திப்பிரிவு

பொதுமக்கள் தங்களின் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உருவாக்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தி நீர் வளம் மேம்படுத்தும் பணிகள் விரைவுப்படுத்துவது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் மழைநீர் சேகரிப்பு, மழை எங்கு பொழிந்தாலும் எப்போது பொழிந்தாலும் என்கிற கருப்பொருளுக்கான சின்னத்தை ஆட்சியர் வெளியிட்டார். அப்போது ஆட்சியர் பேசியதாவது:

நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தி நீர் வளம் மேம்படுத்தும் பணிகளை விரைவுப்படுத்த அனைத்து துறைகள் ஒருங்கிணைந்து ஜல்சக்தி கேந்தரா என்ற மையம் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அறை எண்.95-ல் தொடங்கப்பட்டுள்ளது. மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உருவாக்குவது தொடர்பான தொழில்நுட்ப உதவிகளை 04343- 233009 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

குறிப்பாக தடுப்பணைகள், குளம், குட்டை ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாருதல், கால்வாய்களை சுத்தப்படுத்துவதன் மூலம் அதிக அளவு மழைநீரை சேகரித்தல், மரக்கன்றுகள் நடவு செய்தல் உள்ளிட்ட மழைநீர் கட்டமைப்புகளை உருவாக்குவதன் மூலம் சேகரிக்கப்படும் மழை நீரானது நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவது மட்டுமல்லாது எதிர்கால தேவைக்கு போதுமான நீரையும் சேமிக்க முடியும். எனவே மாவட்டத்தில் உள்ள மக்கள் தங்களின் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உருவாக்க வேண்டும்.

இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் திட்ட இயக்குநர் மலர்விழி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முருகன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் வெங்கடாசலம், சிஇஓ மகேஸ்வரி, ஓசூர் மாநகராட்சி ஆணையர் செந்தில்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்