தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் ரூ.100 கோடி மதிப்புள்ள இடங்களை மாநகராட்சி நிர்வாகம் நேற்று கையகப்படுத்தியது.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே தஞ்சாவூர் யூனியன் கிளப், காவிரி லாட்ஜ், ஜூபிடர் திரையரங்கம் ஆகியவை செயல்பட்டு வந்தன.
இவற்றில், காவிரி லாட்ஜ், ஜூபிடர் திரையரங்கம் செயல்பட்டு வந்த இடத்துக்கான 99 ஆண்டுகள் குத்தகை காலம் கடந்த மே மாதத்துடன் முடிவடைந்து விட்டது. இதேபோல, 100 ஆண்டுகள் கடந்த யூனியன் கிளப்புக்கு ஆவணங்கள் எதுவும் முறையாக இல்லை எனக் கூறப்படுகிறது.
எனவே, ஆக்கிரமிப்பாளர்களை அகற்றும் சட்டத்தின்கீழ் ஆக்கிர மிப்பை அகற்றிக் கொள்ளுமாறு தொடர்புடைய நிர்வாகங்களிடம் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சில மாதங்களுக்கு முன்பு அறி வுறுத்தப்பட்டது. எனினும், இந்த இடங்கள் காலி செய்யப்படாமல் இருந்துவந்தன.
எனவே, ஆக்கிரமிப்பாளர்கள் அகற்றும் சட்டத்தின்கீழ், இந்த இடங்களை கட்டிடத்துடன் கையகப் படுத்தும் நோட்டீஸை அவற்றின் நுழைவுவாயில் கதவில் ஒட்டுமாறு அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையர் க.சரவணகுமார் உத்தரவிட்டார்.
அதன்படி, மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி செயற்பொறியாளர் எம்.ராஜசேகரன் மற்றும் அலுவலர்கள் நேற்று ஜுபிடர் திரையரங்கம், காவிரி லாட்ஜ், தஞ்சாவூர் யூனியன் கிளப் ஆகியவற்றின் வாயில் கதவில் இடத்தை கையகப் படுத்தும் நோட்டீஸை ஒட்டினர். மேலும் இந்த தகவலை பொது மக்களுக்கு அறிவிக்கும் விதமாக தண்டோரா போடப்பட்டது.
இதுகுறித்து மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் எம்.ராஜசேகரன் கூறும்போது, “தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் 2 ஏக்கர் 13 சென்ட் பரப்பளவில் மூன்று பழமையான கட்டிடங்கள் உள்ளன. இவற்றின் குத்தகை காலம் முடிவடைந்துவிட்டதை அடுத்து, அந்த இடத்தை மீட்க மாநகராட்சியால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி, தஞ்சாவூர் மாநகராட்சிக்குச் சொந்தமான இந்த இடம் தமிழ்நாடு பொது வளாகங்கள் (ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றுதல்) 1975-ன் படி தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மாநகராட்சி வசம் கையகப் படுத்தப்பட்டுள்ளது.
எனவே, இவ்விடத்தில் நுழைபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டு பொது அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
இங்குள்ள கட்டிடங்களை பயன்படுத்துவோருக்கு அங்குள்ள பொருட்களை அகற்றிக்கொள்ள 14 நாட்கள் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது கையகப்படுத்தப் பட்ட யூனியன் கிளப் 29,743 சதுர அடி, காவிரி லாட்ஜ் 40,390 சதுர அடி, ஜூபிடர் திரையரங்கம் 13,605 சதுர அடி பரப்பளவு கொண்டவை. இவை ரூ.100 கோடி மதிப்பு கொண்டதாகும்” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago