வரும் 27-ம் தேதி நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடைபெறுவதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் அன்றைய தினம் 10 இடங்களில் மறியல் போராட்டம் நடத்த தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
வேளாண் சட்டங்களை கைவிடவேண்டும். தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெற வேண்டும். மின்சார மசோதா- 2020-ஐ கைவிட வேண்டும். பொது சொத்துக்களை விற்பதை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு அழைப்பின் பேரில் செப்டம்பர் 27-ம் தேதி நாடு தழுவியகடையடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. இப்போராட்டத்தை தீவிரமாக ஆதரிப்பது என்று மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் இப்போராட்டத்தை வெற்றிபெறச் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஐஎன்டியுசி அலுவலகத்தில் தொமுச மாவட்டச் செயலாளர் சுசி ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஐஎன்டியுசி சார்பில் மாநிலசெயல் தலைவர் பி.கதிர்வேல், மாவட்டத் தலைவர் ராஜகோபாலன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.ரசல், மாவட்டத் தலைவர் இரா.பேச்சிமுத்து, ஏஐடியுசி மாவட்டத் தலைவர் ஏ.பாலசிங்கம், மாவட்டச் செயலாளர் கிருஷ்ணராஜ், தொமுச சார்பில் முருகன், ஏஐசிசிடியு சார்பில் மாவட்டத் தலைவர் சகாயம், மாவட்டச் செயலாளர் சிவராமன், ஹெச்எம்எஸ் தலைவர் துறைமுகம் சத்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு அறிவித்துள்ள போராட்டத்தை தூத்துக்குடி மாவட்டத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். செப்டம்பர் 27-ல் தூத்துக்குடி, கோவில்பட்டி ஆகிய மையங்களில் நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்திலும், கயத்தாறு, எட்டயபுரம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், ஏரல், வைகுண்டம், திருச்செந்தூர், சாத்தான்குளம் ஆகிய 8 மையங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு நடைபெறும் மறியல் போராட்டத்திலும் திரளான தொழிலாளர்களை பங்கேற்கச் செய்ய வேண்டும்.
மேலும், செப்டம்பர் 23 அன்று6 போக்குவரத்துக்கழக பணிமனைகள், மின்வாரிய அலுவலகங்கள், எட்டயபுரம் பாரதி நூற்பாலை, பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட அனைத்து ஆலை வாயில்களிலும் ஆர்ப்பாட்டம், செப்டம்பர் 24-ம் தேதி துறைமுகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago