ஜி.எஸ்.டி. வரி விகிதங்களை மூன்றாக குறைக்க கோரிக்கை :

ஜி.எஸ்.டி. வரி விகிதங்களை மூன்றாக குறைக்க வேண்டும் என லகு உத்யோக் பாரதி அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, இவ்வமைப்பின் கோவை மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் வெளியிட்ட அறிக்கையில், “இந்திய ரிசர்வ் வங்கி வராக்கடன் வரையறையை அனைவருக்கும் ஒரே மாதிரியாக நிர்ணயிக்காமல், இரண்டு அல்லது மூன்று நிலைகளில் வழங்க வேண்டும். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு உள்ளது போல குறு நிறுவனங்களில் பணிபுரிவோருக்கும் ஒரு பொதுவான சேம நல நிதியும், காப்புறுதியும் உருவாக்கப்பட்டால் அதிக நன்மை கிடைக்கும். விவசாயிகளுக்கு வழங்கப்படும் ‘கிசான் கிரெடிட் கார்டு’ போன்ற ஒரு திட்டத்தை குறுந்தொழில் முனைவோருக்கும் கொண்டு வர வேண்டும்.

ஜி.எஸ்.டி. வரி விகிதங்களை மூன்றாக குறைக்க வேண்டும். அதேபோல, குறுந்தொழில் நிறுவனங்கள் ஜி.எஸ்.டி. செலுத்துவதற்கான கால அவகாசத்தை மூன்று மாதங்களாக நீட்டிக்க வேண்டும். ஒவ்வொரு பஞ்சாயத்து பகுதிகளிலும் இருக்கும் புறம்போக்கு நிலங்களை தொழில் பகுதிகளாக அறிவித்து, குறைந்தபட்சம் மாவட்டத்துக்கு 4 ஆயிரம் ஏக்கர் வரை தொழிற்பேட்டைகளுக்காக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

குறுந்தொழில்களுக்கு மின்சாரத்துக்கான நிலைக் கட்டணத்தை குறைக்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE