பராமரிப்பு செலவு குறைவு, நிலையான வருமானம் கிடைப்பதால் - கொல்லிமலையில் காபி சாகுபடி பரப்பளவு அதிகரிப்பு : 5 ஆண்டில் 500 ஹெக்டேர் உயர்வு

By கி.பார்த்திபன்

கொல்லிமலையில் கடந்த 5 ஆண்டில் 500 ஹெக்டேர் பரப்பளவிற்கு காபி சாகுபடி அதிகரித்துள்ளது, என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. மிளகு, காபி, பலா, அன்னாசி போன்றவை பிரதான பயிர்களாகும். இந்தப் பயிர்களுக்கு மலையில் உள்ள ஆறு, ஆழ்துளை கிணறு மற்றும் பருவ மழை போன்றவை பாசன ஆதாரங்களாக உள்ளன.

பெரும்பாலும் பருவமழையை நம்பியே சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இதனால் மழை இல்லாத காலங்களில் விவசாயிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, தண்ணீர் தேவை மற்றும் பராமரிப்பு செலவு குறைவு, நிலையான வருமானம் உள்ளிட்ட காரணங்களால் காபி சாகுபடியை அதிகரித்துள்ளதாக கொல்லிமலை விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் அலுவலக அதிகாரிகள் கூறியதாவது:

காபி செடிகள் நடவு செய்யப்பட்ட 3-வது ஆண்டு முதல் 25 ஆண்டுகள் வரை மகசூல் கிடைக்கும். குறிப்பிட்ட ஆண்டு இடைவெளியில் காபி செடிகளை கவாத்து (பராமரிப்பு) செய்தால் மட்டும் போதும். கொல்லிமலையை பொறுத்தவரை பாசன வசதி குறைவு என்பதால் காபி சாகுபடி ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

கடந்த 2016-ம் ஆண்டு கொல்லிமலையில் 1,147 ஹெக்டேராக இருந்த காபி சாகுபடி, 2017-ம் ஆண்டு 1,436 ஹெக்டேர், 2018-ல் 1,594 ஹெக்டேர், 2019-ம் ஆண்டு 1,936 ஹெக்டேர், 2020-2021-ம் ஆண்டு 2,151 ஹெக்டேர் என காபி சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளது. கடந்த 5 ஆண்டில் காபி சாகுபடி பரப்பளவு 500 ஹெக்டேர் பரப்பளவிற்கு உயர்ந்துள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை திண்டுக்கல் மாவட்டம் காபி சாகுபடியில் முதலிடம் வகிக்கிறது. நீலகிரி 2-ம் இடமும், ஏற்காடு 3-ம் இடமும் வகிக்கிறது. காபியில் ரொபோஸ்டா, அரபிக்கா என இரு வகைகள் உள்ளன. கொல்லிமலையில் அரபிக்கா ரக காபி சாகுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்