கிருஷ்ணகிரி அருகே கிராமத்தில் - இரு குட்டியுடன் சிறுத்தை நடமாட்டம் மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை :

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி அருகே இரு குட்டிகளுடன் சிறுத்தை நடமாடி வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மாவட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி எச்சரித்துள்ளார்.

கிருஷ்ணகிரி வனச்சரக எல்லைக்குட்பட்ட பையனப்பள்ளி மற்றும் பெத்ததாளப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளில் கடந்த 13-ம் தேதி இரு குட்டிகளுடன் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும், பையனப்பள்ளி, பாஞ்சாலியூர் கிராமங்களில் ஆடுகளையும், போலுப்பள்ளி கிராமத்தில் 2 நாய்களையும் கடித்ததாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கிருஷ்ணகிரி வனச்சரக அலுவலர் மகேந்திரன் தலைமையிலான வனத்துறை ஊழியர்கள் சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, சிறுத்தையின் கால் தடங்கள் இருந்ததை கண்டறிந்தனர்.

மேலும், சிறுத்தை கூசுமலைப் பகுதிக்கு வந்து செல்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், முக்கிய இடங்களில் கேமரா பொருத்தப்பட்டும், ட்ரோன் உதவியுடனும், வனத்துறை அலுவலர்கள் மற்றும் கால்நடை உதவி மருத்துவர் பிரகாஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் இரவு பகலாக தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இதனிடையே, தருமபுரி மண்டல வனப்பாதுகாவலர் பெரியசாமி , ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி ஆகியோர் பெத்ததாளப்பள்ளி, கூசுமலை பகுதியில் நேற்று தணிக்கை மேற்கொண்டனர்.

அப்போது, வன உயிரின காப்பாளர் கூறும்போது, “கூண்டுகள் அமைத்து சிறுத்தையை பிடிக்கவும், பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விடுவிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறுத்தையின் நடமாட்டம் உள்ளதாக தெரியவந்துள்ள பகுதிகள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதுதொடர்பாக வனத்துறையினர் கிராம மக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்