பெட்ரோல், டீசல் விலையைஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும் : கொமதேக ஈஸ்வரன் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டியின்கீழ் கொண்டுவர வேண்டும் என கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்தார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கொமதேக சார்பில், ஈரோடு சம்பத் நகரில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு நேற்று கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஒரு ஆண்டாக போராடி வரும் விவசாயிகளை சந்திக்க பிரதமர் முன்வரவில்லை. தமிழகத்தில் காலாவதியான சுங்கச்சாவடிகளை மூடுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவதற்கு, மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம்.

கடந்த ஆட்சியின்போது பயிர்க்கடன், நகைக்கடன் வழங்குவதில் பல்வேறு முறைகேடு நடந்துள்ளது. இதனை ஆய்வு செய்வதற்காக குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் கடன் தள்ளுபடி செய்வதில் சற்று காலதாமதம் ஏற்படுகிறது. தமிழகத்தில் கல்வித்தரம் சிறப்பாக உள்ளது. எனவே, நீட் தேர்வு தமிழகத்துக்கு தேவையில்லை. மத்திய அரசு நினைத்தால், தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்