கோவை வேளாண்மைப் பல்கலை.யில் - சர்வதேச சிறுதானிய ஆண்டு தொடக்க விழா :

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், சர்வதேச சிறுதானிய ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி நடந்தது.

இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம், வரும் 2023-ம் ஆண்டை, சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது. இதன் தொடக்க விழா, நேற்று முன்தினம் காணொலிக் காட்சி மூலமாக, கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடந்தது. இதில், மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பங்கேற்று தொடக்க உரையாற்றினார்.

அவர் பேசும்போது, ‘‘2023-ம்ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறுதானிய உற்பத்தி அதிகரிப்பு, ஆரோக்கிய உணவு, மதிப்பூட்டப்பட்ட சிறுதானிய உணவு, தொழில் முனைவோர் பயிற்சிகள், சந்தைப்படுத்துதல், ஏற்றுமதி செய்தல் ஆகியவை முக்கிய அம்சங்களாகும்’’ என்றார்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அ.சு.கிருட்டிணமூர்த்தி தலைமை உரையாற்றினார். அவர் பேசும்போது, ‘‘இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவடைந்து விட்டது. ஊட்டச்சத்தில் தன்னிறைவடைய வில்லை. எனவே, அனைவருக்கும் சத்தான உணவு மற்றும் சரிவிகித உணவு கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும்’’ என்றார். உணவு பதப்படுத்துதல் பொறியியல் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் பி.ராஜ்குமார், பயிர் இனப் பெருக்கம் பிரிவின் பேராசிரியர் அ.சுப்ரமணியன், வனவியல் பிரிவு பேராசிரியர் உமேஷ் கண்ணா, மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சித்ராதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

முன்னதாக, பல்கலைக் கழகத்தின் விரிவாக்கக் கல்வி இயக்குநர் மு.ஜவஹர்லால் வரவேற்றார்.

பயிற்சிப் பிரிவின் பேராசிரியர் மற்றும் தலைவர் ரவிகுமார் தியோடர் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஊட்டச்சத்து தோட்டத்துக்கான காய்கறிப் பயிர்களின் விதைகள் மாணவிகள், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. மேலும், பல்கலைக்கழகத்தில் மரக்கன்றுகளை மாணவிகள் நட்டனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE