ஆற்று வெள்ளத்தில் சிக்கிய தொழிலாளி : 3 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் மீட்பு :

By செய்திப்பிரிவு

பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை ஒன்றியம் பெரியபோது கிராமம் நேரு வீதியைச் சேர்ந்தவர் குமார் (43) இவர் அம்பராம்பாளையம் சுங்கம் பகுதியிலுள்ள உணவகத்தில் பணியாற்றி வருகிறார்.

நேற்று முன்தினம் மாலை அம்பராம்பாளையம் பகுதியிலுள்ள ஆழியாறு ஆற்றில் குளிக்க சென்றார். ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது ஆழியாறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றில் விநாடிக்கு 2400 கனஅடி தண்ணீர் வந்ததால், தண்ணீர் இழுவை வேகம் அதிகமாக இருந்தது. இதனால் குமார் நீந்தி கரைக்கு வரமுடியாமல் தவித்தார். ஆற்றின் மையத்தில் இருந்த பாறையில் ஏறி உயிர் தப்பினார். ஆற்றின் நடுவில் வெள்ளத்தில் ஒருவர் சிக்கி இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து நிலைய அலுவலர் புருஷோத்தமன் தலைமையில் சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு துறையினர், குமாரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்கள் தினேஷ்குமார், சௌந்தரராஜன் ஆகியோர் கரையில் இருந்து சுமார் 100 அடி தொலைவில் ஆற்றின் மையப்பகுதியில் சிக்கி தவித்த குமாரை லைப்ஜாக்கெட் அணிந்து நீந்தி சென்று கயிறு கட்டி மீட்டு வந்தனர். வெள்ளத்தின் வேகம் அதிகமாக இருந்ததால் 3 மணி நேரம் போராட்டத்துக்கு பின்னர் குமார் மீட்கப்பட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE