தலைமை ஆசிரியர் எஸ். ஜெகன்னாதன் விருதுக்கு - அரசுப் பள்ளி வரலாற்று ஆசிரியர் ஆ.மாணிக்கம் தேர்வு :

நடப்பாண்டுக்கான தலைமை ஆசிரியர் எஸ்.ஜெகன்னாதன் விருதுக்கு வரலாற்று ஆசிரியர் ஆ.மாணிக்கம் தேர்வாகியுள்ளார். வரும் நாட்களில், கோவையில் நடைபெற இருக்கும் விழாவில் இந்த விருது வழங்கப்பட இருக்கிறது.

இதுதொடர்பாக கோவையைச் சேர்ந்த கோவிந்தராஜூலு வனஜாட்சி மெமோரியல் டிரஸ்ட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 2018-ம் ஆண்டிலிருந்து, கோவிந்தராஜூலு வனஜாட்சி டிரஸ்ட் சார்பில், வகுப்பறைகள், பாடநூல்களைத் தாண்டி மாணவர்கள் முன்னேற்றத்துக்காக சேவைபுரியும் ஆசிரியர்களை, மூத்த பதிப்பாளர், விஜயா பதிப்பகம் மு. வேலாயுதம், தேவகோட்டை எழுத்தாளர் நலந்தா செம்புலிங்கம் ஆகியோர் கொண்டதேர்வுக்குழு தேர்வு செய்து, தலைமை ஆசிரியர் எஸ்.ஜெகன்னாதன் விருது வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, தூத்துக்குடி மாவட்டம்,  வைகுண்டம், குமரகுருபரர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வரலாற்று ஆசிரியராகப் பணியாற்றும் ஆ.மாணிக்கத்துக்கு நடப்பாண்டுக்கான விருது வழங்கப்பட உள்ளது. மாணிக்கம், நாள்தோறும் பள்ளி செல்லும்போதும், பள்ளியிலி ருந்து திரும்பும்போதும், தான் கடந்து செல்லும்சிவகளை பகுதியில், ஆற்றுப் படுகையில் கண்ட பொருட்களை ஆய்வு செய்தார். அவை முதுமக்கள் தாழியின் சிறு பகுதிகளாக இருக்கக் கூடும் எனக் கருதினார். அதுகுறித்த தகவல்களை தொல்பொருள் ஆய்வுக் கழகத்திற்கு அனுப்பி வைத்தார். அதன்தொடர்ச் சியாக, தொல்பொருள் ஆய்வுக் கழகம் அகழ்வாய்வுப் பணியை மேற்கொண்டது. அங்கு எடுக்கப்பட்ட பொருட்களை ஆய்வு செய்ததில், ‘பொருநை நாகரீகம்’, கீழடிக்கும் முந்தைய நாகரீகமாக இருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. ‘கார்பன் டேடிங்’ முறையில் சோதித்ததில், சிவகளை நாகரீகம், 3,200 ஆண்டு தொன்மையானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

சரித்திரம் வியக்கும் இந்த தேடல் காரணமாக, தமிழ் நாகரீகத்தின் தொன்மை நீட்சிக்கு வலுவான சான்று கிடைத்துள்ளது. இந்தப் பணியில் மாணிக்கத்தால் ஈடுபடுத்தப்பட்ட மாணவர்களின் அனுபவம் அளபரிப்பது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE