சேலம் மாவட்டத்தில் சீரான பருவ மழை : விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் தகவல்

By செய்திப்பிரிவு

சேலம் மாவட்டத்தில் சீரான பருவ மழை பெய்துள்ளது என விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் காணொலிக் காட்சி மூலம் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு, தலைமை வகித்து ஆட்சியர் கார்மேகம் பேசியதாவது:

வேளாண் பணிகளுக்குத் தேவையான உரம் மற்றும் விதை போன்ற இடுபொருட்கள் போதுமான அளவு வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு உள்ளது.

தோட்டக்கலை துறையின் மூலம் இயற்கை இடுபொருள்களான பஞ்சகவ்யம், தசகவ்யம், ஜீவாமிர்தம், திறனூட்டப்பட்ட நுண்ணுயிர் மற்றும் மண்புழு உர வடிகட்டி தயாரிக்கும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கும் விவசாய குழுக்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளதால், விவசாயிகள் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்களை அணுகலாம்.

சேலம் மாவட்டத்தில் இந்தாண்டு (2021) பருவ காலத்தில் பெய்ய வேண்டிய சராசரி 997.90 மிமீ மழையில் செப்டம்பர் வரை பெய்ய வேண்டிய 627.40 மிமீ மழையில் செப்டம்பர் 15 வரை 638.20 மிமீ மழை பெய்துள்ளது. இந்தாண்டு மழை தொடர்ந்து சீராக பெய்து வருகிறது.

சேலம் மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் பழங்கள், காய்கறிகள், வாசனை திரவியங்கள், மலைப்பயிர்கள், மருத்துவப் பயிர்கள் மற்றும் மலர்களுக்கு 1,56,500.97 ஹெக்டரில் பயிர் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 55,007.39 எக்டரில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

மேலும், பயிர் உற்பத்தியில் 49.13 லட்சம் டன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 4.32 லட்சம் டன் பயிர் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வெ.ஆலின் சுனேஜா, உதவி ஆட்சியர் (பயிற்சி) முகமது சபீர் ஆலம், இணை இயக்குநர் (வேளாண் துறை) கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE