மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தால் - 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர் :

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தால் பயனடைந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது.

தமிழக சுகாதாரத் துறையின் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்றதிட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலினால் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது.

இத்திட்டத்தின்கீழ் பயனாளிகளின் இல்லங்களுக்குச் சென்று முக்கியமான மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன. 45 வயதுக்கு மேற்பட்ட உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கான மருந்துகளை வழங்குதல், நோய் ஆதரவு மற்றும் இயன்முறை சிகிச்சை சேவைகள் வழங்குதல், அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கான பரிந்துரை போன்ற பல்வேறு சேவைகள் இத்திட்டத்தின்கீழ் வழங்கப்படுகின்றன.

முதற்கட்டமாக இத்திட்டம், 50 வட்டாரங்களிலுள்ள 1,172 அரசு துணை சுகாதார நிலையங்கள், 189 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 50 மேம்படுத்தப்பட்ட ஆரம்பசுகாதார நிலையங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 மாநகராட்சிகளில் (சென்னை, கோயம்புத்தூர் மற்றும்திருநெல்வேலி) தலா ஒரு மண்டலம் என மொத்தம் 21 நகர்ப்புற ஆரம்பசுகாதார நிலையங்களிலும் தொடங்கப்பட்டது.

அடுத்ததாக 335 வட்டாரங்களில் உள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் மாநகராட்சிகளிலுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் இத்திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு இறுதிக்குள், மாநிலத்தின் பிற கிராம மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் மக்களைச் சென்றடையும் வகையில் இத்திட்டத்தை விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தினால் இதுவரை மொத்தம் 5 லட்சத்து 36,441 பயனாளிகள் பயனடைந்துள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE