அந்தியூர் அருகே 1,250 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவர் கைது :

ஈரோடு: ஈரோடு மாவட்டத்திலிருந்து கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு அதிகளவில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல் துறையினர் அவ்வப்போது தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் அந்தியூர் அடுத்த குருமந்தூர்மேடு பகுதியில் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல் துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 1,250 கிலோ ரேஷன் அரிசி கடத்தியது தெரியவந்தது.

இதையடுத்து சரக்குவேன் ஓட்டுநரான அந்தியூர் அடுத்த காட்டுப்பாளையம் ஏரி தோட்டம் பகுதியைச் சேர்ந்த வாசு (எ) வாசுவகுமாரை காவல் துறையினர் கைது செய்தனர். விசாரணையில் பெருந்துறையில் உள்ள வடமாநிலத்தவர்களுக்கு கூடுதல் விலைக்கு ரேஷன் அரிசியை விற்பனை செய்வதற்காக கடத்தியது தெரியவந்தது. இதுதொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE