பச்சமலையிலுள்ள கோரையாறு அருவியில் சுற்றுலா பயணிகளுக்கான மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்த சுற்றுலாத்துறை முன்வந்துள்ளது. அங்கு சிறு நடை மேம்பாலம், பாதுகாப்பு கம்பிகள், உடை மாற்றும் அறை கட்ட வனத்துறையிடம் திட்ட மதிப்பீட்டுடன்கூடிய கருத்துரு கோரப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் பச்சமலையில் மங்களம் அருவி, கோரையாறு அருவி, மயிலூத்து அருவி ஆகிய 3 அருவிகள் உள்ளன. மழைக் காலங்களில் இங்குள்ள அருவிகளில் நீர்வரத்து இருக்கும். ஆனால் இவற்றுக்குச் செல்ல முறையான சாலை வசதி இல்லாததால் அங்கு சென்றுவர சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகி வந்தனர்.
குறிப்பாக இங்குள்ள கோரையாறு அருவிக்குச் செல்ல பச்சமலை புதூர் கிராமத்திலிருந்து குறிச்சி செல்லும் சாலையில் 2 கி.மீ தொலைவில் பாதை உள்ளது. அங்கிருந்து 600 மீ தொலைவில் உள்ள இந்த அருவிக்குச் செல்லும் சாலை பல இடங்களில் மிக மோசமாகவும், சுமார் 110 மீ தொலைவுக்கு ஒத்தையடிப் பாதையாகவும், இடையே சிறிய ஓடையுடனும் காணப்படுகிறது. மழைக் காலங்களில் நீர்வரத்து அதிகமாக இருந்தால், இடைப்பட்ட ஓடையைக் கடப்பது மிகவும் சிரமம்.
எனவே அருவிக்குச் செல்லும் பாதையைச் சீரமைக்க வேண்டும், ஓடையின் மீது சிறு நடை மேம்பாலம் அமைக்க வேண்டும், குளிக்க வருவோருக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என சுற்றுலா பயணிகள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து புத்தனாம்பட்டியைச் சேர்ந்த சரவணன் என்பவர் முதல்வரின் தனிப்பிரிவுக்கும் மனு அளித்திருந்தார்.
இந்த சூழலில் கோரையாறு அருவியில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள சுற்றுலாத்துறை முன்வந்துள்ளது. இதன் முதற்கட்டமாக நீர்வீழ்ச்சி மற்றும் அபாயகரமான வழிப்பகுதிகளில் பாதுகாப்பு கம்பிகள், உடை மாற்றும் அறை, சிறு நடை மேம்பாலம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கான திட்ட மதிப்பீட்டுடன் கூடிய கருத்துரு அனுப்பி வைக்குமாறு வனத்துறையினருக்கு சுற்றுலாத் துறையிடமிருந்து கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது, வன அதிகாரிகளிடமிருந்து கருத்துரு பெறப்பட்ட பின்னர், சுற்றுலாத் துறையினரிடமிருந்து நிதியைப் பெற்று மாவட்ட நிர்வாகம் மூலம் இப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago