திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் - பெட்ரோல், காஸ் விலை உயர்வை கண்டித்து வீடுகள் முன் நாளை ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

பெட்ரோல், காஸ் விலையுயர்வு, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் உள்ளிட்ட மத்திய அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் சார்பில் நாளை(செப்.20) அவரவர் வீடுகளின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், அமைச்சருமான கே.என்.நேரு நேற்று காணொலிக் காட்சி மூலம் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ், மணப்பாறை எம்எல்ஏ அப்துல் சமது, காங்கிரஸ் சார்பில் கோவிந்தராஜ், ஜவகர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இந்திரஜித், திராவிடமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஜெயசீலன், ராஜா, மதிமுக சார்பில் வெல்லமண்டி சோமு, தமிழ்மாணிக்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அருள், முத்தழகன், கொங்குநாடு மக்கள் கட்சி சார்பில் சேகர், தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ராயல்ராஜா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஹபீபுர் ரகுமான், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பயாஸ், திராவிடர் கழகம் சார்பில் ஆரோக்கியராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது, இப்போராட்டத்தை பொதுமக்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளர் காடுவெட்டி ந.தியாகராஜன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘செப்.20-ம் தேதி (நாளை) காலை 9.30 மணிக்கு தில்லைநகரிலுள்ள திமுக முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

இதேபோல மாவட்டம், மாநகரில் உள்ள திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் தங்களது வீடுகளின் முன் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்