சேலம்- கரூர் இரட்டை ரயில் பாதை அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தொடக்கம் :

By செய்திப்பிரிவு

சேலம் - நாமக்கல் - கரூர் உள்ளிட்ட 4 வழித்தடங்களில் இரட்டை ரயில் பாதைகள் அமைப்பதற்கான திட்ட அறிக்கையைத் தயாரிக்கும் பணிகளை தெற்கு ரயில்வே தொடங்கியுள்ளது.

மாநிலங்களின் மக்கள் தொகை அடிப்படையில் முக்கிய ரயில்வே திட்டங்களை செயல்படுத்த ரயில்வே சார்பில் ஆய்வு நடத்தப்படுகிறது. அதன் முடிவுகளுக்கு ஏற்ப திட்டங்களை செயல்படுத்த ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்து வருகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் ரயில் போக்குவரத்து தேவை அதிகரித்துள்ள திருச்சி - ஈரோடு, சேலம் - நாமக்கல் - கரூர், கரூர் - திண்டுக்கல், விழுப்புரம் - காட்பாடி ஆகிய 4 வழித்தடங்களில் இரட்டை ரயில் பாதைகள் அமைப்பதற்கான பணிகளை தெற்கு ரயில்வே தொடங்கியுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே உயர் அதிகாரிகள் தெரிவித்ததாவது:

கரோனா ஊரடங்கிற்குப் பின்னர் பெரும்பாலான ரயில்கள் மீண்டும் இயக்கப்படுகின்றன. அதேபோல், புதிய ரயில் பாதைகள், இரட்டை பாதைகள் அமைப்பதற்கான பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

இந்நிலையில், தமிழகத்தில் 4 வழித்தடங்களில் இரட்டை ரயில் பாதைகள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி திருச்சி - ஈரோடு, சேலம் - நாமக்கல் - கரூர், கரூர் - திண்டுக்கல், விழுப்புரம் - காட்பாடி ஆகிய 4 வழித்தடங்களில் இரட்டை ரயில்பாதை அமைப்பதற்கு விரிவானதிட்ட அறிக்கையை (டி.பி.ஆர்) தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இப்பணி 6 மாதங்களில் முடிவடையும். அதன்பிறகு, ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்து, மத்திய பட்ஜெட்டில், இந்த திட்டங்கள் செயல்படுத்துவதற்கான நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும், என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்