புதிதாக காட்டை உருவாக்கும் முயற்சியில் - 5 ஏக்கரில் 3,000 மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடக்கம் : கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

குடியாத்தம் அருகே அழிக்கப்பட்ட காட்டை மீட்கும் முயற்சியின் இரண்டாம் பகுதியாக 5 ஏக்கரில் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த உள்ளி கிராமத்தையொட்டிய பாலாற்றங்கரையில் தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சுமார் 25 ஏக்கர் நிலம் வருவாய்த் துறையினர் கடந்த ஆண்டு மீட்டனர். ஏற்கெனவே அந்த பகுதியில் இருந்த காடுகள் அழிக்கப்பட்ட இடம் என்பதால் அங்கு மீண்டும் புதிதாக காட்டை உருவாக்க திட்டமிடப்பட்டது. இதற்கான முயற்சியை இளைஞர் காந்த் என்பவர் எடுத்த முயற்சிக்கு அப்போதைய மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் ஆதரவு அளித்தார்.

இதனை தொடர்ந்து, சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் 5,400 மரக்கன்றுகள் நடும் பணி கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது. ஊரக வேலை திட்ட பணியாளர்கள் உதவியுடன் நடப்பட்டுள்ள இந்த மரக்கன்றுகள் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது. ஓராண்டில் மரக் கன்றுகள் நன்கு வளர்ந்து காணப்படுகிறது.

இந்நிலையில், மீதமுள்ள 5 ஏக்கர் பரப்பளவில் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி நேற்று தொடங்கப்பட்டது. இதனை, முன்னாள் மாவட்ட ஆட்சியரும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருமான சண்முகசுந்தரம் நேற்று தொடங்கி வைத்தார். இங்கு, ஆலன், அரசன், அத்தி, பாதாம், நாவல், சொர்கம் மற்றும் பழமரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியுள்ளன. இந்தப் பணி 4 நாட்களில் முடியும் என கூறப்படுகிறது.

இது தொடர்பாக 25 ஏக்கர் பரப்பளவில் அழிக்கப்பட்ட காட்டை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இளைஞர் காந்த் கூறும்போது, ‘‘கடந்த ஆண்டு நடப்பட்ட மரக்கன்றுகள் வேகமாக வளர்ந்துள்ளது. மரக்கன்றுகளை பராமரிக்க தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் வேலி அமைக்கும் பணி நடந்து வருகிறது. மரக்கன்றுகள் நன்கு வளர்ந்ததும் இந்த இடத்தை வனத்துறை வசம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்