தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.செல்வன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் புலையர் மற்றும்முதுவார் பழங்குடியினர் வாழ்ந்துவருகின்றனர்.
கடந்த 2006-ம் ஆண்டு வன உரிமைச் சட்டப்படி இவர்களுக்கு நிலஉரிமை பட்டாவும், சமூக உரிமையும் கோரி கடந்த 10 ஆண்டுகாலமாக பலகட்ட போராட்டம் நடத்தி உள்ளனர். ஒவ்வொரு போராட்டத்துக்கும் பின்பு தான் அவர்களுக்கான உரிமைகள் கிடைத்துள்ளன.
நில உரிமை, சமூக உரிமை பெற சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, ஒவ்வொரு மலை செட்டில்மென்ட் பகுதியிலும் கிராமசபா கூட்டங்கள் நடத்தி, வனஉரிமைக் குழுக்கள் அமைக்கப்பட்டு, நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அக்குழுக்களில் தீர்மானங்கள் நிறைவேற்றி, அதன்படி நில அளவை செய்யப்பட்டு, வரைபடங்களும் தயார் செய்யப்பட்டுள்ளன.
மக்களவைத் தேர்தலால், கோட்ட அளவிலான கூட்டம் நடைபெறவில்லை. அதன்பின் நில உரிமைப் பட்டா வழங்குவது கிடப்பில் போடப்பட்டுள்ளது.
தற்போது சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு ஆட்சிமாற்றம் நடைபெற்ற நிலையில் கோட்ட அளவிலான வன உரிமைக்குழு கூட்டம் மூன்று முறை நடைபெற்றுள்ளது. அதில் அனைத்து ஆவணங்களும் பரிசீலிக்கப்பட்டு, முதல்கட்டமாக சுமார் 300 பேருக்குநிலப்பட்டா வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மாவட்ட வன உரிமைக் குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதில் முதுவர் பழங்குடி யினருக்கு மட்டும் பட்டா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் காலம்காலமாக வனத்தில் வாழும் புலையர் இன மக்களுக்கு நில உரிமை வழங்குவது காலதாமதமாகிறது. நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் 2006-ம் ஆண்டு வன உரிமைச் சட்டப்படி நிலப்பட்டா மற்றும் சமூக உரிமை வழங்க மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago