திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சட்டிருட்டி வாய்க்கால் தூர் வாரும் பணி தொடங்கி உள்ளது.
மன்னார்குடி அருகே செருமங்கலம், நெடுவாக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மன்னார்குடி நகரத்துக்குள் வடிகால் வாய்க்காலாக சட்டிருட்டி வாய்க்கால் செல்கிறது. ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை காலங்களில் பெய்கின்ற கனமழையின்போது, இந்த வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பழைய அரசு அலுவலர் குடியிருப்பு, அந்தோனியார் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வாய்க்காலில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் தலைப்பு முதல் பாமணி ஆற்றில் கலக்கும் கடைமடை வரை தூர் வாரும் பணி ஓரிரு தினங்களுக்கு முன்னர் தொடங்கி உள்ளது. மேலும் வாய்க்காலின் இருபுறங்களிலும் கரைகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
மன்னார்குடி நகராட்சி ஆணையர் சென்னு கிருஷ்ணன், பொறியாளர் குணசேகரன், இளநிலை பொறியாளர் பாஸ்கரன் ஆகியோர் மேற்பார்வையில் இந்த பணி நடைபெற்று வருகிறது.
இந்த வாய்க்காலின் ஒரு பகுதியில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் சிமென்ட் தளம் அமைக்கப்பட்டது. அந்த பகுதிகளில் தண்ணீர் விரைவாக வடிந்து சென்றுவிடுகிறது. ஆனால், எஞ்சிய பகுதியில் சிமென்ட் தளம் அமைக்கப்படவில்லை. அந்தப் பகுதிகளில்தான் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து, பாதிப்புகளும் அதிகமாக உள்ளன.
மேலும், வாய்க்கால் ஆங்காங்கே தூர்ந்து போயுள்ளது. அதன் காரணமாகவே வாய்க்காலில் தண்ணீர் தேங்குகிறது. எனவே, எஞ்சியுள்ள பகுதியையும் சிமென்ட் தளம் அமைத்து சீரமைக்க உரிய நிதி ஒதுக்கீட்டை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago