தஞ்சாவூர் மாவட்டத்தில் பிளஸ் 2 படிக்கும் தலா ஒரு மாணவர், மாணவிக்கு கரோனா தொற்று நேற்று முன்தினம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் செப்.1-ம் தேதியிலிருந்து 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு, கரோனா வழிகாட்டு முறைகளைப் பின்பற்றி செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் புனல்வாசலில் உள்ள அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் ஒரு மாணவிக்கு கரோனா தொற்று இருப்பது நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த மாணவி வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.
இதேபோல, கும்பகோணம் அருகே திருபுவனத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவர் ஒருவருக்கும் நேற்று முன்தினம் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து, அந்த மாணவரும் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். இதைத் தொடர்ந்து, இந்த 2 பள்ளிகளிலும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் வகுப்புகளில் பயிலும் மற்ற மாணவ, மாணவிகளுக்கு இன்று(செப்.6) கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago