குளங்கள் தூர்வாரும் பணிகள் முறையாக நடக்க வேண்டும் : எஸ்டிபிஐ வேளாண் அணி வலியுறுத்தல்

திருநெல்வேலி மாநகர் மாவட்ட எஸ்டிபிஐ கட்சி வேளாண் அணி செயற்குழு கூட்டம் மானூரில் நடைபெற்றது. வேளாண் அணி மாநில தலைவர் ஷேக் அப்துல்லா, எஸ்டிபிஐ கட்சி மாநகர் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி, துணைத் தலைவர் கனி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டனர். வேளாண் அணியின் திருநெல்வேலி மாநகர் மாவட்ட தலைவராக தாசில்கனி, துணைத் தலைவராக முல்லை கபீர், செயலாளராக பீர், செயற்குழு உறுப்பினர்களாக சம்சுதீன், அனவர்ஷா, முகையிதீன்அலி, சித்திக் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கூட்டத்தில், “சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். சின்ன வெங்காயத்தை தோட்டங்களிலேயே தொடர்ந்து 6 மாதம் இருப்பு வைக்கும் பாரம்பரிய தொழில்நுட்பத்தை விவசாயிகளுக்கு கற்றுத் தருவதற்கு வேளாண் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமையன்பட்டியில் உள்ள அரசு சேமிப்புக் கிடங்குகளில் சின்ன வெங்காயத்தை பாதுகாத்து, உரிய விலை கிடைக்கும் நேரத்தில் விவசாயிகள் விற்பனை செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குளங்களை தூர் வருவதற்காக அரசு நியமித்துள்ள குத்தகைதாரர்கள் சரிவர தூர்வார வேண்டும். செழியநல்லூர் குளம் தூர்வாரும் பணியை பார்வையிட்டு, குறைகளை சுட்டிக்காட்டிய தமிழ்நாடு விவசாய சங்கத்தின் பிரதிநிதியை குத்தகைதாரர்கள் தாக்க முற்பட்டது கண்டனத்துக்குரியது. இதில் அரசு உடனடியாக தலையிட்டு விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும். தூர்வாரும் பணிகள் முறையாக நடப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE