தி.மலை மாவட்டம் கடலாடி அரசு மேல்நிலை பள்ளி - ஆசிரியர், அவரது குடும்பத்தினர் : 6 பேருக்கு கரோனா தொற்று : பள்ளியை மூட பரிந்துரைக்க சுகாதார துறை முடிவு

By செய்திப்பிரிவு

கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் மற்றும் அவரது குடும்பத்தினர் 5 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத் தில் கடந்த 1-ம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் இயங்கி வருகின்றன. கரோனா தொற்று பரவல் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடைபெறுகிறது.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் தொடங்கப்பட்ட முதல் மூன்று நாட்களுக்கு அறிகுறி மற்றும் பாதிப்பு ஆகிய காரணங்களால், சுமார் 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், கலசப்பாக்கம் அடுத்த கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது நேற்று முன் தினம் உறுதியானது. இதையடுத்து அந்த ஆசிரியர், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், ஆசிரியர் சென்று வந்த வகுப்பறை, கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து மூடப்பட்டு 'சீல்' வைக்கப்பட்டது. மேலும், பள்ளி முழுவதும் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

50 பேருக்கு கரோனா பரிசோதனை

அந்த ஆசிரியருக்கு கடந்த 3-ம் தேதி கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு தொற்று இருப்பது நேற்று முன் தினம் (4-ம் தேதி) உறுதியானது. இதற்கிடையில் அவர், பள்ளிக்கு சென்று கடந்த 1 மற்றும் 2-ம் தேதி நடைபெற்ற வகுப்புகளில், பங்கேற்றுள்ளார். இதனால், அவருடன் தொடர்பில் இருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என 50 பேருக்கும், அவரது குடும்பத்தில் உள்ள 6 பேருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், அவரது குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு தொற்று இருப்பது நேற்று உறுதியாகி உள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பரிசோதனை விவரம் இன்று (6-ம் தேதி) தெரியவரும் என கூறப்படுகிறது. முடிவு வரும் வரை, அனைவரையும் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் மருத்துவர் செல்வகுமாரிடம் கேட்டபோது, “ஆசிரியருக்கு கரோனா தொற்று இருப்பது கடந்த 4-ம் தேதி உறுதியானது.

இதையடுத்து, அவரது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில், ஆசிரியரின் மனைவி, 3 வயது மகள், 8 மாத ஆண் குழந்தை மற்றும் 2 பேர் என மொத்தம் 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது இன்று(நேற்று) உறுதியானது. அவர்கள் அனைவருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக...

இதையடுத்து, ஆசிரியரின் சொந்த ஊரான வடமாத்தூர் கிராமத்தை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியரின் குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரிடமும் கரோனாபரிசோதனை மேற்கொள்ளப்ப ட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பரிசோதனை முடிவுகள் நாளை(இன்று) தெரியவரும்.

அதனடிப்படையில் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கருதி பள்ளியை மூட பரிந்துரைக் கப்படும்” என தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்