தென்காசி அருகே கார் கவிழ்ந்து விபத்து - மதுரையைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே கார் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் மதுரையைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.

மதுரை மாவட்டம் செல்லூர், வில்லாபுரம் மற்றும் கப்பலூர் பகுதியைச் சேர்ந்த 9 பேர் காரில் குற்றாலம் சென்றுகொண்டு இருந்தனர். காரை செல்லூரைச் சேர்ந்த மன்சூர் அலிகான் (27) என்பவர் ஓட்டிச் சென்றார். நேற்று அதிகாலையில் தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே ஒரு வளைவில் திரும்பியபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

இதில், செல்லூரைச் சேர்ந்த நாகராஜன் என்பவரது மகன் பிரபு (24) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 8 பேரும் படுகாயம் அடைந்தனர். சிவகிரி போலீஸார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த அனைவரும் சிவகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கப்பலூரைச் சேர்ந்த மங்களராஜ் என்பவரது மகன் சுரேஷ்குமார் (31) உயிரிழந்தார். மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மன்சூர் அலிகானும் உயிரிழந்தார்.

விபத்தில் உயிரிழந்த சுரேஷ்குமாரின் தம்பி ராஜேஷ்குமார் (28), செல்லூரைச் சேர்ந்த கணேசன் மகன் பேச்சிமுத்து (21), அழகுசுந்தரம் மகன் அருண் (29), சேகர் மகன் வாசகமணி (30), வில்லாபுரத்தைச் சேர்ந்த அமல்ராஜ் மகன் ஜான் (29), நீதிராஜ் மகன் அருண்குமார் ஆகிய 6 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரோனா பரவல் காரணமாக அருவிகளில் குளிக்க எவருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. இருப்பினும் தடையை மீறி, இங்குள்ள தனியாருக்குச் சொந்தமான அருவிகள் சிலவற்றில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகிறது. இவர்கள் 9 பேரும், குற்றாலத்தில் உள்ள தனியார் அருவியில் குளிக்க வந்ததாகக் கூறப்படுகிறது. இவ்விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE